விதவிதமான ரசம்.. இதில் நீங்கள் எந்த ரகம்..!!
வாரத்தில் தினமும் ஒவ்வொரு வகையான ரசம் வைக்கலாம். எலுமிச்சை ரசம், புளி ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், ரசத்தில் பல வகைகள் இருந்தாலும், நாம் விரும்பிய ரசத்தை ஒவ்வொரு நாளும் வைத்து கொடுப்பதால் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்.
ரசம் வைப்பது என்னவோ ஒன்றாக இருந்தாலும், மேற்கூறியவற்றில் ஒரு பொருளை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்ப்பதால் ரசத்தின் சுவை மாறுபடுகிறது. ஓமவல்லி இலைச் சாறு, வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, புதினா சாறு, ஆரஞ்சு சாறு போன்ற இந்த சாறுகளை, தினமும் வைக்கும் ரசத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாறாக கலந்து கொள்வதால், இதன் சத்துக்களும் குழந்தைகளுக்கு சேரும்.
பிறந்த குழந்தை முதல், பெரியவர்கள் வரை இப்படி சேர்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான எனர்ஜியை இது கொடுக்கும். சாதாரண ரசம் வைத்தே, இந்த மேற்கூறிய சாறுகளை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
சாதாரண ரசம் 1
தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி, ரசபொடி 3 தேக்கரண்டி, புளி கரைசல் அரை கப், பச்சை மிளகாய் 2, மிளகு கால் ஸ்பூன்.
செய்முறை : துவரம்பருப்பு, மிளகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடி செய்து கொள்ள வேண்டும். ஒன்றிரண்டாக தட்டி வைத்தும் கொள்ளலாம். புளி உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அத்துடன் தயார் செய்த பொடியை போட்டு, அடுப்பில் வைக்க வேண்டும். மஞ்சள் தூள் போட்டு ரசம் கொதித்ததும் ஒரு சொட்டு நீர் விட்டு சிறிது நேரம் கழித்து இறக்க வேண்டும். கொத்தமல்லி தூவிப் பரிமாறலாம்.
சாதாரண ரசம் 2
தேவையான பொருட்கள் : தக்காளி-3 பழுத்தது, புளி கரைசல் அரை கப், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், உளுத்தம் பருப்பு சிறிதளவு.
செய்முறை : தக்காளியுடன், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தட்டி வைத்த மிளகு, சீரகத்தை போட்டு தாளித்து பிறகு வாசனை வந்ததும் ரசத்தை ஊற்றி, கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இதே மாதிரி செய்து கொஞ்சம் வேகவைத்த பருப்பும் சிறிது, பருப்பு நீரும் ஊற்றலாம். இது பருப்பு ரசமாக இருக்கும்.