கும்முனு இருக்க தீபாவளி லேகியம்
ஐப்பசி, கார்த்திகை மழைக்காலம் தொடங்கிவிட்டது. முக்கியமாக தீபாவளி என்றாலே முதலில் இடம் பெறுவது இந்த தீபாவளி லேகியமாக தான் இருக்கும். மேலும் ஐப்பசியில் தீபாவளி கொண்டாடி பலகாரங்களை உண்டு, களைப்படையாமல் குதூகலமாக கொண்டாடுவதற்கு இந்த லேகியம் அவசியம். மற்ற பலகாரங்களை செய்தாலும் இந்த லேகியத்தை செய்து வைத்துக் கொள்ள திகட்டுதல் என்பது இருக்காது.
- தீபாவளி என்றாலே முதலில் இடம் பெறுவது இந்த லேகியமாக தான் இருக்கும்.
- எளிதில் ஜீரணமாகி புத்துணர்வை அளிக்கும்.
- உடம்பு சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருக்க இந்த லேகியம் உதவுகிறது.
தீபாவளி லேகியம்
தேவையான பொருட்கள்
சுக்கு 15 கிராம், திப்பிலி 10 கிராம், மல்லி 2 ஸ்பூன், மிளகு 2 ஸ்பூன், பூண்டு 2 ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, ஓமம் 2 ஸ்பூன், ஜீரகம் இரண்டு ஸ்பூன், கருப்பட்டி 150 கிராம், நெய் கால் கப், நல்லெண்ணெய் 2 கரண்டி, உப்பு இரண்டு சிட்டிகை, தண்ணீர் அரை டம்ளர்.
செய்முறை விளக்கம்
ஒரு கடாயில் சுக்கு, மிளகு, மல்லி, ஜீரகம், ஓமம் சிறிது நேரம் பச்சை வாசனை போகும் அளவிற்கு இளம் தீயில் வறுத்து எடுத்து வைக்கவும். சிறிது எண்ணெய்விட்டு இஞ்சியை பொடி துண்டாக நறுக்கி பூண்டு, இஞ்சி இரண்டையும் சிறிது நேரம் வறுத்து எடுத்து வைக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டியை தட்டிப் போட்டு மூழ்கும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு ஐந்து முதல் பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்து பாகு காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் தண்ணீரை வடித்து எடுத்து பிறகு பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகுபதம் வரும் முன் அரைத்த பொடியையும் கலந்து கைவிடாமல் கிளறவும். மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
அவ்வப்போது நெய், நல்லெண்ணெய் கலந்து கிளறவும். லேகியம் தயாரானதும் நெய், நல்லெண்ணெய் மேலே வந்ததும், அடுப்பை ஆஃப் செய்து சிறிது நேரம் ஆற வைத்து கடைசியாக தேன் விட்டுக் கிளறி சுத்தமான டப்பாவில் எடுத்து வைக்கவும்.
ஒரு வருடம் வரை இந்த லேகியத்தை வைத்து உபயோகிக்கலாம். குளிர்காலம், மழைக்காலம் தவிர வெயில் காலங்களில் இதை மிளகு அளவிற்கு உபயோகிக்கவும். குளிர்காலம், மழைக்காலம், தீபாவளி நேரங்களில் பெரியவர்கள் கால் ஸ்பூன், சிறிய குழந்தைகளுக்கு மிளகு அளவிலும் சாப்பிட்டு சிறிது தண்ணீர் குடித்தால் அஜீரணம் பிரச்சனைகள் தீரும். தீபாவளியில் செய்த இந்த லேகியத்தை சாப்பிட குளிர் காலங்களிலும், மழை காலங்களிலும் உடல் வலிக்கு, கை, கால் குடைச்சலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.