கிராமங்களின் வளர்ச்சியில் வாழும் இந்தியா !
இந்தியாவில் கிராமங்களின் வளர்ச்சி எவ்வாறு வளங்கள் கிராமங்களுக்கு பங்கிடுகின்றனர். கிராமத்தின் வளர்ச்சி போக்குக்கு அரசு செய்ய வேண்டியது குறித்து நாம் அறிய வேண்டும். சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்திய நாடு கடந்த 68 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறந்து உலக நாடுகளுடன் தன்னை நிலைநிறுத்தி நிருபித்துவிட்டது.
இந்தியாவின் முதுகெலும்பு:
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி, கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழ முடியும் என்றார் நேரு. நகர்ப்புறத்திற்கு ஈடாக கிராம புரத்திற்கு சமமான வசதிகளை வழங்க வேண்டியது தேசத்தின் பொறுப்பாகும். இதன் பொருட்டு நாடு முழுவதும் சுதந்திர காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு திட்டங்கள், சலுகைகள், முன்னுரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் கிராமப்புறங்களில் எட்டப்பட வேண்டிய வளர்ச்சி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
வளர்ச்சி திட்டங்கள்
கிராம சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள்: இந்தியாவின் ஸ்ரீநிகேதன், சாந்தி நிகேதன், கூர்க் கோவில், போன்றோர் மேற்கொண்ட கிராம சமுதாய வளர்ச்சி திட்டங்கள் தேசிய முக்கியத்துவம் பெற்றன. கிராம வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டங்கள் கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்துதல் குடிசைத் தொழில்களுக்குத் ஊக்கமளித்தலுடன் திட்டகாலங்களில் சமுதாய வளர்ச்சி திட்டம் 1951 முதல் 1956 வரை கிராம வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தேசிய விரிவு பணி திட்டத்தின் கீழ் அமைதியான ஆரவாரமற்ற வளர்ச்சியை முன்னிறுத்தியது.
கிராமங்களில் கைத்தொழில் திட்டம், கிராம வீட்டு வசதி திட்டம், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம், மாவட்ட வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ஊட்டச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1970இல் வேளாண்மை மையப்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட ஒட்டுமொத்த கிராம சமுதாய வளர்ச்சியை மையப்படுத்தி திட்டங்களில் அறிவிக்கப்பட்டது.
1985ல் கிராம வளர்ச்சிக்கான மதிப்பீடு திட்டம் ராம் கமிட்டி மூலம் அமைக்கப்பட்டது. இவ்வாறு ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டம். வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களால் கிராம மக்களுக்கு வளர்ச்சியை வழங்கி திட்டங்களை செயல்படுத்தியது.
கிராமத்தினர் தேவை: கிராமத்தினருக்கு நல்ல கல்வி அடிப்படை வசதிகள் மேலும் சுகாதார வசதிகள் மருத்துவ வசதிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி, விவசாயத்திற்கு தேவையான தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை இல்லாத மின்சக்தி நகர்ப்புறத்திற்கு ஈடாக கிராமங்களுக்கு வழங்க வேண்டும்.
கிராமப்புறத்தில் பசுமையை நிலைப்படுத்தி வறுமையைப் போக்க வேண்டும். கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் வளர்ச்சி முன்னேற்றத்தை மேம்படுத்த திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
குறைவான பங்கீடு: என்னதான் அரசு திட்டங்களை தீட்டினாலும் வளர்ச்சிகளை பங்கீடு செய்தாலும் அது முறையாக பயனாளர்களை சென்றடைகின்றதா என்றால் கேள்விக்குறியே, நாட்டின் வளர்ச்சி கிராமங்களின் வளர்ச்சியை பொறுத்து அமைந்துள்ளது. இன்றைய நகரங்களின் பிறப்பிடம் நேற்றைய கிராமங்களின் இருப்பிடம் ஆகும்.
இன்று நாட்டிலுள்ள மிகப் பெரிய தலைவர்கள் அனைவரும் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான். இந்தியாவின் செழிப்பு கிராமங்களில் இருந்து தான் தொடங்கியது. 2000ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட கிராம வளர்ச்சிக்கான புரா திட்டம் மக்களை சென்றடைய கலாம் அவர்கள் மீண்டும் 2006இல் புரா திட்டத்தை வலியுறுத்தி வளர்ச்சிகளை நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு இடப்பெயர்வு செய்ய வேண்டும். நகரங்களுக்கு ஈடான கிராம வளர்ச்சி போற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கிராமபுற வளர்ச்சிக்கான கேள்விகள் :
கிராமப்புற வளர்ச்சியின் வேகம் குறைவாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அது சரியான பயனாளர்களை சென்றடைவதில்லை. அரசு இதுகுறித்து ஆலோசித்து செயல்பட வேண்டும். கிராமங்களில் கிடைக்கும் மொபைல் போன்கள், தொழில்நுட்ப வசதியை விட அங்குள்ள பற்றாக்குறையான உணவைப்பற்றி சிந்திக்க மறுப்பது ஏன்? வறட்சியைப் போக்க நீர்வளத்தை அதிகரிக்க அரசு செய்ய வேண்டியது என்ன? எத்தனை கிராமங்களுக்கு முறையான மருத்துவ வசதி அளிக்கப்பட்டுள்ளது? கிராமப்புற மாணவர்களின் கல்வி தரம் எவ்வாறு உள்ளது? என்ற கேள்வி நாட்டின் மேல் அக்கறையுள்ள குடிமகன்களின் கேள்வியாகும். இதுகுறித்து நகர்ப்புறங்களில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து செயல்பட வேண்டும். கிடைக்கும் வளங்கள் கிராமங்களுக்கும் முறையாக பங்கீடு செய்யப்பட வேண்டும்.
ஓரு சாலை இருவர் பயணம்:
கிராமம் நகரம் என வேற்றுமைகளை மறந்து ஒரு சாலையில் இருவரும் பயணிக்கும்படி திட்டங்களை முறையாக செயல்படுத்தி மக்களுக்கு நல்ல ஆதரவை கொடுக்க வேண்டியது அரசு மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் முக்கிய கடமையாகும். மேலும் அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டியது கிராமத்தினரின் கடமையாகும். மக்களும் அரசும் ஒரு சேர்ந்து பயணிக்கும் போது வளங்களின் பகிர்வும் நேர்மறையாக இருக்கும். வளர்ச்சியும் சீராக ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்.