அறுசுவை விருந்து..!!
பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை வாழைப்பூ உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அறுசுவை உணவுகளை தினமும் உண்ண வேண்டும். ஆனால் நாம் அறுசுவை உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதில்லை. துவர்ப்பு சுவை வாழைப்பூவில் உள்ளது.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது கர்ப்பப்பைக்கு நல்லது. வாழைப்பூ பொரியல், வாழைப்பூ கூட்டு, வாழைப்பூ வடை இப்படி விதவிதமாக சமைத்து உண்ணலாம். வாழைப்பூ பொரியல், வாழைப்பூ கூட்டு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பூ கூட்டு
தேவையான பொருட்கள் : வாழைப்பூ 1, உருளைக்கிழங்கு 2, துவரம் பருப்பு 100 கிராம், இஞ்சி 2 துண்டு, பூண்டு 6 பல், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் 2, தாளிக்க சோம்பு, கடுகு, எண்ணெய், உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை : வாழைப்பூவை சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும். வாழைப் பூவை நறுக்கி நீரில் போட்டு கழுவ கூடாது. அதன் துவர்ப்பு சுவை போய் விடும். உருளைக் கிழங்கு, துவரம் பருப்பு மூன்றையும் தனித்தனியே வேக வைத்து எடுத்து வைத்து விடுங்கள்.
மசித்த உருளைக்கிழங்கு, துவரம் பருப்புடன் நீர் வடித்த வாழைப்பூவை சேர்த்து வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு தாளித்து அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் எடுத்தும் பரிமாறலாம். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இந்தக் கூட்டு துவர்ப்பு சுவை குறைவாக இருப்பதுடன் சாப்பிட குழந்தைகளும் விரும்புவார்கள்.
வாழைப்பூ பொரியல்
தேவையான பொருட்கள் : வாழைப்பூ1, எண்ணெய் 2 ஸ்பூன், தாளிக்க கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு அரை ஸ்பூன், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சிறிது, தேங்காய் துருவியது அரை மூடி. ஆயில், உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை : வாழைப்பூவை தோல் உரித்து நரம்பு எடுத்து அரிசி களைந்த தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைக்கவும். அதில் உள்ள தண்ணீரை இறுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், வெங்காயம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி சிறிது நீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை போட்டு இறக்கினால் வாழைப்பூ பொரியல் தயாராகி விடும். மஞ்சள் தூள் விருப்பப் படுபவர்கள் கால் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.