உங்க சமையல பக்கத்து வீட்ல தெருஞ்சுக்கணுமா..!!
சேப்பங்கிழங்கு சாம்பார்
தேவையானவை : துவரம் பருப்பு 100 கிராம், சேப்பங்கிழங்கு 8 வேகவைத்து தோலுரித்து நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயம் தோல் உரித்தது 8, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புளிக்கரைசல் அரை கப், மஞ்சள் தூள், பெருங்காயம் தூள் கால் ஸ்பூன், தனியா தூள் ஒன்றரை ஸ்பூன், மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு.
தாளிக்க : கடுகு, வெந்தயம் தலா கால் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை : துவரம் பருப்பை, கழுவி ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து வேக வைக்கவும். சேப்பங்கிழங்கை தனியே வேக வைத்து தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள் தனியாத் தூள், சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை விட்டு, கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், வெந்த பருப்பையும், சேர்த்துக் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சேப்பங்கிழங்கு சாம்பார் தயார்.
வல்லாரைக் கீரை சாம்பார்
ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடியது வல்லாரை. அரிசி கழுவிய நீரில் சமைப்பதால் கீரையின் கசப்பு, துவர்ப்பு தெரியாது.
தேவையானவை : 100 கிராம் துவரம்பருப்பு, ஒரு கட்டு கழுவி ஆய்ந்த வல்லாரைக் கீரை, சின்ன வெங்காயம் நறுக்கியது, தக்காளி ஒன்று நறுக்கியது, நெய் 2 ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், உப்பு
தேவையான அளவு.
தாளிக்க : கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் தலா கால் ஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை : துவரம் பருப்பு ஊறவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் கீரையை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், சீரகம், சேர்த்து வேகவிடவும். கடாயில் நெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கீரை வதக்கி, அரிசி கழுவிய நீரை விட்டு வேகவிடவும். உப்பு சாம்பார் பொடி, வேக வைத்த பருப்பை சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
தால்சா குழம்பு
தேவையானவை : 100 கிராம் துவரம்பருப்பு, 50 கிராம் கடலை பருப்பு, கத்தரிக்காய் 2, தக்காளி, வெங்காயம் 3, நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு, மாங்காய், முருங்கைக் காய் தலா 1, புளிக்கரைசல் சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது அரை ஸ்பூன், தேங்காய் விழுது ஒரு ஸ்பூன், சிறிதளவு கறிவேப்பிலை, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை : துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, இரண்டையும் கழுவி ஊறவைத்து, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் பச்சை மிளகாய், கத்தரிக்காய், தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி வேக விடவும். காய்கள் வெந்தவுடன் புளிக்கரைசல், உப்பு, பட்டை, கிராம்பு ,ஏலக்காய் விழுது, தேங்காய் விழுது, வெந்த பருப்புகள் விட்டுக், கொதிக்க விடவும். கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். சைடு டிஷ் இதை சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.