அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

கலர்புல் பொரியல்..!!

உடலுக்கு தேவையான சத்தான காய்கறிகளை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொரியல், அவியல், கூட்டு இப்படி காய்கறிகளை நமக்கு பிடித்த வகையில் செய்து உண்ணலாம்.

ஒரே காய்கறியில் செய்யாமல், பல காய்கறிகளை கொண்டு செய்வது உடலுக்குத் தேவையான அதிக சத்து கிடைக்கும். மூவண்ண பொரியல், காலிப்ளவர் பட்டாணி கறி இவற்றை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா.

காலிப்ளவர் பட்டாணி கறி

தேவையான பொருட்கள் : காலிபிளவர் 1, துவரம் பருப்பு 100 கிராம், தக்காளி 3, பட்டாணி 2 கப், மிளகு பொடி ஒரு ஸ்பூன், மஞ்சள் பொடி கால் ஸ்பூன், கடுகு அரை ஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை : துவரம் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து, இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக விட வேண்டும். முக்கால் பதம் வெந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பச்சை பட்டாணி ஊற வைத்து நீரை வடித்து விட்டு எடுத்து வைக்கவும். காலிஃப்ளவர் பூவை பொடிதாக தேவையான சைஸில் நறுக்கி சுடு தண்ணீரில் உப்பு, மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து, பச்சைத் தண்ணீரில் கழுவி எடுத்து வைப்பதால் இதனுடைய வாசம் போய் விடும்.

பச்சைப் பட்டாணியுடன் அறிந்த காலிபிளவரை ஒரு தேக்கரண்டி உப்பு, மிளகு பொடி சேர்த்து நன்றாக வேக விட்டு இறக்கவும். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளிப் பழத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் பருப்பை சேர்த்து கிளறி இறக்கினால் காலிப்ளவர் பட்டாணி கறி தயார். தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். காரத்திற்கு மிளகு போதுமானது. காரம் தேவைப்பட்டால் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

மூவண்ண பொரியல்

தேவையான பொருட்கள் : கேரட், முட்டை கோஸ், பீன்ஸ் தலா அரை கப், பெரிய வெங்காயம் 2, தேங்காய் துருவல் அரை கப், பச்சை மிளகாய் 5, எண்ணெய், உப்பு, கடுகு தேவையான அளவு.

செய்முறை : காய்கறிகளை கழுவி பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு வெடிக்க விட்டு, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை வதக்கி கொள்ளவும். பிறகு அதில் காய்களை போட்டு நன்றாக வதக்கவும். சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் வேக வைப்பது நல்லது.

காய் வெந்ததும் தண்ணீர் வற்றியவுடன் துருவிய தேங்காயை போட்டு இறக்கி விடுங்கள். மஞ்சள் தூள், சாம்பார் தூள் தூவி இறக்கினால் வாசம் தூக்கலாக இருக்கும். மூன்று கலர்கள் கொண்ட காய்கறிகளை சேர்த்து இருப்பதால் இது மூவண்ண பொரியலாக, கலர்ஃபுல்லாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *