துவையல் வரைட்டீஸ் பார்ப்போமா ..!!
தினமும் குழம்பு செய்து அலுத்து விட்டதா? ஒரு சேஞ்சுக்கு துவையல் வகைகளை செய்து கொடுங்கள். இந்தத் துவையலை எந்தெந்த வகையில் செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
பருப்பு துவையல்
தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு 50 கிராம், மிளகாய் வற்றல் 5, பூண்டு பற்கள் தோலுரித்து 5, தேங்காய் அரை மூடி துருவியது.
செய்முறை : கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்புடன், மிளகாய், உப்பு சேர்த்து எண்ணெயில் சிவக்க வறுத்து, பூண்டு வைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இதன் சுவை கூடுதலாக இருக்கும். உப்பு, மிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்தத் துவையல் சாதத்தில் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவை மணத்துடன் இருக்கும். மழைக் காலங்களில் இந்தத் துவையல் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
இஞ்சி துவையல்
தேவையான பொருட்கள் : இஞ்சி 10 கிராம், மிளகாய் 5, உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன், புளி தேவைக்கேற்ப, உப்பு சிறிதளவு.
செய்முறை : இஞ்சியைத் தோல் சீவி கழுவி தேவைக்கேற்ப அறிந்து கொள்ள வேண்டும். வரமிளகாய், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை தனித் தனியே வறுத்து வைக்கவும். பின்பு வறுத்த உளுந்தம் பருப்பு, மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி துவையலை போட்டு நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். இது தயிர் சாதத்திற்கும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
வெங்காயத் துவையல்
தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் 100 கிராம், உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி, கொத்தமல்லி ஒரு தேக்கரண்டி, வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப, உப்பு சிறிதளவு, புளி சிறிது.
செய்முறை : முதலில் சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு, பிறகு உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கொத்தமல்லி ஒவ்வொன்றையும் சிவக்க வறுத்து எடுக்கவும். இதனுடன் புளி, உப்பு, பருப்பு சேர்த்து முதலில் அரைக்கவும். பாதி அரைபட்டதும் வெங்காயத்தை சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும். கடைசியாக வாணலியில் கடுகு, தாளித்து அதில் போட்டுக் கிளறி நன்றாக வதக்கி எடுத்து வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இந்தத் துவையல் தோசை, இட்லிக்கு அருமையாக இருக்கும்