சாக்லேட் மோதகம்
சாக்லேட் என்றாலே துள்ளிக்குதிக்கும் பருவம் குழந்தைகள் பருவம். எத்தனை முறை சாப்பிட்டாலும் ஓயாது அதன் மேல் உள்ள மோகம். குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் வைத்து மோதகத்தை செய்வதற்கு 15 நிமிடங்கள் போதும். இந்த ரெசிபியை பார்த்தாலே உங்கள் குழந்தைகள் ஒரே குஷியோ குஷி தான். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்த்து நீங்களும் இதை செய்து பாருங்கள்.
சாக்லேட் மோதகம்
தேவையான பொருட்கள்
ஃப்ரஷ் கிரீம் அரை கப், டார்க் சாக்லேட் முக்கால் கப், நறுக்கப்பட்ட பிஸ்கட் துண்டுகள் 2 கப், கண்டன்ஸ்டு மில்க் அரை கப், வால்நட், முந்திரி, பிஸ்தா, பாதாம் நறுக்கியது கால் கப், நெய் தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
அடி கனமான பாத்திரத்தில் அல்லது நான் ஸ்டிக் வாணலியில் கண்டன்ஸ்டு மில்க், சாக்லேட் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் ஒன்றாகப் போட்டு கலக்கி விடவும். பிறகு அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்துள்ள இந்த கலவையை எடுத்து வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கெட்டியான பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் நறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் முந்திரி பாதாம் கலவையை கலந்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இக்கலவை மேலும் கெட்டியாக மாவு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு வேறொரு தட்டில் இந்த கலவையை மாற்றி ஆற விட வேண்டும். ஆறிய பிறகு மோதக அச்சில் நெய் தடவி இந்த கலவை கெட்டியாக வைத்து பின்பு அதிகப்படியாக இருக்கும் மாவை எடுத்தால் அழகான, சுவையான சாக்லேட் மோதகங்கள் தயாராகி விடும். இதை அப்படியே குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த மோதகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.