சிதம்பரம் கோவில் விவகாரம்..!! தமிழக அமைச்சர் சேகர் பாபு அதிரடி அறிவிப்பு..!!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து முதல்வரின் உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “முதல்வர் வழிகாட்டுதல் படி இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொற்காலம் என போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. கோவில் நிலங்கள் மீட்பு, திருக்கோவில் குடமுழுக்கு, அறநிலையத்துறை சார்பில் பள்ளிகள் கல்லூரிகள், திருக்கோவில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என பல்வேறு நல திட்டங்கள் நிகழ்த்தியுள்ளது.
சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம்.அந்த வகையில் அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரி அன்று 100க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2 ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மகா சிவராத்திரி விழா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்காக 2,500 இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்ட திருக்கோவில் நிலங்கள் அரசுத்துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும். மீட்கப்பட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கற்கள் பதிக்கப்படும்.
எட்டுகால் பாய்ச்சலில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகின்றது. போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதவிர எங்கள் கவனத்திற்கு வரும் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம், மேலும் கவனத்திற்கு வராததையும் செய்து கொண்டிருக்கிறோம்.
சிதம்பரம் திருக்கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டு வருகின்றது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த சில விரும்ப தகாத சம்பவங்கள் இந்து சமய அறநிலையதுறையின் கவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து முதல்வரின் உத்தரவின் பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.