2010 ஐபிஎல் வரலாறு மீண்டும் திரும்புகிறதா! சிஎஸ்கே வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதியதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றியை தழுவியது.
- சாம் கரன், ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு, தோனி, ஜடேஜா பேட்டிங்கிற்கு வலு கொடுத்தனர்.
- சாஹர், சாம் கரன், தாக்கூர், பிராவோ, கரன் ஷர்மா என பவுலர்கள் அனைவரும் பிரமாதப்படுத்தினர்.
- ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக சேர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை தழுவியது.
- இது அதுவோ! 2010 வரலாறு மீண்டும் வருகிறதா! என்ற ஆவலில் ரசிகர்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இன்றைய போட்டியில் புதுவிதமாக ஓபனர்சை மாற்றி அனுப்பினார் தல தோனி. சாம் கரன் மற்றும் டூ ப்லஸி ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கினர். சாம் கரன் 36 ரன்களும் அம்பத்தி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் தலா 41 மற்றும் 42 ரன்களும் குவித்தனர். தோனி மற்றும் ஜடேஜா தலா 21 மற்றும் 25 ரன்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒட்டுமொத்தமாக 167 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணிக்கு 168யை இலக்காக நிர்ணயித்தது.
தல தோனி
ஐபிஎல் டி20 போட்டியில் இருக்கும் அனைத்து அணியிலும் இந்தியர்கள் பல இருப்பினும் தல இருக்கும் அணியை ரசிகர்கள் தம் அணியாகக் கொண்டு ரசிக்கின்றனர். அதற்குக் காரணம் அவரின் ஆட்டம். அவரின் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு மயங்காத ரசிகரும் உண்டோ!
கடந்த போட்டியில் அரபு நாட்டின் தட்பவெப்ப நிலையை தாங்க முடியாமல் திண்டாடிய தோனியை கேலி செய்தவர்களும் உண்டு. அதே நேரத்தில் இன்று அவர் அடித்த சிக்ஸருக்கு வாய் பிளக்காதவரும் உண்டோ!
பேட்டிங்கா! பவுலிங்கா!
இன்றைய போட்டியின் வெற்றிக்கு காரணம் பேட்டிங்கா! பவுலிங்கா! என்பதற்கு இரண்டும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸாக விளையாடியதே வெற்றிக்கு காரணம் என்று கூறலாம்.
சாம் கரன்
ஆர் ஜே பாலாஜியின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் சுட்டிக் குழந்தையின் பிரமாதமான ஆட்டம். பேட்டிங்கில் 31 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 3 ஓவர்களில் 18 ரன்கள் 1 விக்கெட் எடுத்தும் பட்டையைக் கிளப்பினார்.
ரவீந்திர ஜடேஜா
ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் விக்கெட்டை இழக்காமல் 25 ரன்கள் குவித்தார். மேலும் பிரமாதமாக பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே 3 ஓவரில் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.
கேம் சேஞ்சர்
சென்னை தோற்று விடுமோ என்ற பயத்தை கிளப்பியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேன் வில்லியம்சன் ஆட்டம். அவர் அடித்த அரைசதம் சென்னைக்கு ஆட்டம் காட்டியது. அவர் விக்கெட் இழந்த பிறகுதான் சென்னை சற்று பெருமூச்சு விட்டது. ஆகையால் அவருக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது.
2010
ஐபிஎல் டி20 2010-இல் இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோற்று 2 போட்டிகளை வென்று அதற்கு அடுத்ததாக எட்டாவது போட்டியை வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் அந்த போட்டியில் தோனி இதேபோல் ஹேர் கட் செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2010 ஐபிஎல் டி20 கப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது, இந்த முறையும் வென்று விடுமோ என்ற பயத்தை மற்ற அணியின் மத்தியில் கிளப்பியுள்ளது.