ஆன்மிகம்ஆலோசனை

விநாயகர் சதுர்த்தியன்று சங்கடம் தீர்த்து வினை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்க!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். வீட்டில் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.

துன்பங்கள் தூர விலகி ஓடும். பிடித்து வைத்தால் பிள்ளையார். மஞ்சளில் பிடித்து வைத்தால் அவர் விநாயகராக அருள் தருவார். மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி தான் மோதகத்தை படைக்கின்றோம்.

அவல் குசேலனை குபேரன் ஆக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து, கணபதி கவசம் பாடினால் மனமகிழ்வோடு மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.

விநாயகருக்கு பிடித்த இலைகள். மல்லிகை பூ, செண்பகப் பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை, இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம். மேலும் அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம், விளாம் பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் தொடங்குபவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு விரதத்தை தொடங்குவார்கள். தொடர்ந்து மாதம் தோறும் வருகிற சதுர்த்தி நாட்களில் விரதமிருந்து வர வேண்டும். அடுத்த விநாயகர் சதுர்த்தி அன்று இவ் விரதத்தை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

தடைப்பட்ட திருமணம், குழந்தைப் பேறு, வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக இவ் விரதத்தை மேற்கொள்வார்கள். இதனால் வேண்டுதலும் நிறைவேறும். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்தது.

கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர். கேது பகவான் பரிகாரமாக கணபதி ஹோமம் செய்வது விசேஷம். சண்டி ஹோமம் செய்தால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும். நம் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது.

சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட அனைத்து பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும். ஆவணி மாதத்தில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி தினத்தில் தான் சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *