எல்லாமே வியாபாரம் எங்க போறது பெண்கள்!
பொதுவாகவே ரயிலில் பயணம் செய்யவே பெரும்பாலானோர் விரும்புவர் , விலை மலிவு , பிரயாண அலுப்பும் தெரியாது அலுங்காமல் போகலாம் அது மட்டும் இல்லை கழிப்பிட வசதியும் உண்டு !
ஆம் பிரயாணங்களில் இத்தகைய கழிப்பிட வசதி இன்றியமையாதது , ஆகையால் முதியவர்கள் ரயிலில் டிக்கெட் கிடைக்காவிடில் பிரயாணத்தையே தயங்காமல் தள்ளிவைத்து விடுகின்றனர் .
ஆனால் எல்லோராலும் எந்நேரமும் ரயில் பயணம் மேற்கொள்ள இயலாமல் போகலாம் , அவசரப்பயனமாக அமையலாம் , அவரவர் வாய்ப்புக்கும் வசதிக்கும் ஏற்றாற்போல பேருந்திலோ , காரிலோ பயணிக்கின்றோம்.
பயணங்களில் பெண்களின் பாடு:
அத்தகைய பயணங்களில் ஏற்படும் அதி முக்கிய சிக்கல் கழிப்பிடம் ! வழி நெடுக அரசாங்க மேற்பார்வையில் இயங்கும் கழிப்பிடங்கள் இருந்தாலும் அவற்றின் பராமரிப்பும் , சுகாதாரமும் உலகறிந்த ரகசியம் !
ஆண்கள் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை, எங்கேயும் எப்போதும், திறந்தவெளி, ஒதுக்குப்புறம் என்று சமாளித்துவிடலாம் ஆனால் பெண்களோ பாவம் !
அவர்கள் நெடுஞ் சாலையில் உள்ள ஓட்டல்களையோ அல்லது பெட்ரோல் பங்குகளையோ தான் நம்பி உள்ளனர்.
கோவித்-19 ஊர் அடங்கு உத்தரவிற்கு சில நாட்கள் முன்னாள், திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலேயுள்ள ஒரு தனியார் (ரிலையன்ஸ்) பெட்ரோல் பங்கில் பெண்கள் சிலர் கழிப்பிடத்தைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டதற்கு கேவலமாகப் பேசியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பெட்ரோலோ டீசலோ வாங்கினால் தான் அனுமதிப்போம் என்று கூறிவிட்டனர் . அவர்களோ சிலமணி நேரம் முன்புதான் வண்டி முழுவதும் எரிபொருள் நிரப்பியுள்ளனர் ! சம்பந்தப்பட்ட பெண்கள் பாவம் கூனிக்குறுகி விட்டனர்.
ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் பங்கிலே இந்த நிலைமை என்றால் மற்ற இடங்களில் கேட்கவே வேண்டாம், நமக்கு ஏற்படும் பெரும்பான்மையான உடல் உபாதைகளுக்கு இத்தகைய கழிவுகளை வெளியேற்றாமல் அடக்குவதும் ஒரு முக்கிய காரணம், இதிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது மேலும் வருத்தப்படக்கூடிய விஷயம்.
ஆறுகளுக்கு மட்டும் பெண்கள் பெயர்:
நம் நாட்டில் ஓடும் அத்துணை நதிகளுக்குப் பிரம்மபுத்திரா தவிர காவிரி, கங்கா, யமுனா என பெண்கள் பெயர் தான், நவராத்திரி, தசரா என்று பெண்களைப் போற்றி பாராட்டும் கலாச்சாரம் கொண்டோர் நாம். பெண் உரிமைபற்றி ஓயாமல் பேசப்படும் நமது நாட்டிலே, அதுவும் நம்மாநிலத்திலே இதுதான் நிலை
மனிதாபிமானம் , மனிதத்தன்மை எல்லாம் எங்கே தான் போனதோ ! அதற்கும் வியாபாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்பது போல் ஆகிவிட்டது, பெண்களுக்கு முதலில் குறைந்தபச்ச மரியாதையாவது கொடுங்கள் வேறு எதையும்மே அவர்கள் எதிர்பார்க்கவில்லை.