பாலிவுட்டிலிருந்து டாலிவுட்டுக்கு சென்றிருக்கும் கொரோனா
பணத்திற்கு தெரியும் தான் இருக்கும் இடம் ஆனால் நோய்க்கு தெரியுமா? குறிப்பாக கொரோனாவுக்கு தெரியுமா? பாமர மக்களாக இருந்தாலும் சரி நாட்டை ஆளும் அரசனாக இருந்தாலும் சரி நோய் என்று வந்துவிட்டால் பாரபட்சம் பார்க்காமல் தாக்குகின்றது.
பாலிவுட்டின் பிரபலங்களான அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆராத்யா பச்சன் என முழு குடும்பத்தையும் தாக்கியது கொரோனா. ஆரம்ப காலத்தில் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் பட்டவர்கள் நோயின் ஆதிக்கம் பரவல் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் தாயும் மகளும் குணமடைந்து வீடு திரும்ப அப்பாவும் மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலிவுட்டிலிருந்து டாலிவுட்டுக்கு சென்றிருக்கும் கொரோனா என்று சொன்னவுடனே; யாருப்பா அந்த வலையில சிக்கினதுனு கேட்கிறீங்களா! பிரபலமான இயக்குனரான எஸ். எஸ். ராஜமௌலி தாங்க.
பாகுபலி படத்தின் இரண்டு பகுதிகளையும் இயக்கியவர் எஸ். எஸ். ராஜமௌலி. பல பிரம்மாண்டமான படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி மூலமாக தேசிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி. பிரம்மாண்டத்தின் மறு சொல்லாக தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் அனைத்து திரை உலகங்களிலும் திகழுபவர் இவர்.
எஸ். எஸ். ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா இருப்பதை தெரிவித்துள்ளார். ‘தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் லேசாக காய்ச்சல் ஏற்பட; மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவரின் வழிமுறைப்படி அனைத்து விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி எங்களை நாங்களே தனிமைப் படுத்திக் கொண்டோம்.’ என அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தார் எஸ். எஸ். ராஜமௌலி.
டாலிவுட்டின் மற்றொரு இயக்குனரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் மும்பைக்கு சென்று வந்த இயக்குனர் தேஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறும்படம் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பிற்காக பயணம் மேற்கொண்ட இந்த இயக்குனர் சிறு அறிகுறிகள் தென்படவே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் கொரோனாவிற்கு பாசிட்டிவாக வந்துள்ளது. மற்றொரு செய்தி என்னவென்றால் அவரின் குடும்பத்தினர் யாருக்கும் அந்த தொற்று பரவவில்லை.
இரு இயக்குனர்களுக்கும் அவரவர் ரசிகர்களும் மற்ற திரையுலக நண்பர்களும் பிரார்த்தனையுடன் மிக விரைவில் மீண்டு வர வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.