மாணவி ஹேமமாலினி வழக்கில் பூசாரியை தப்பிக்க வைக்க சதி..!! களத்தில் குதித்த பாஜக..!!
திருவள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல் துறை அலட்சியம் காட்டி வருவதால் விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறிய பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், உரிய நீதி கிடைக்க தேசிய மகளிர் ஆணையத்தை அணுக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி, அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி தீராத வயிற்று வலி மற்றும் பிற உடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
பூசாரி முனுசாமியை பற்றி கேள்விப்பட்டதும் மகளை எப்படியும் குணப்படுத்திடலாம் என்ற நம்பிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹேமமாலினியை அவரது பெற்றோர் முனுசாமியிடம் விட்டுவிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், பூசாரியின் வீட்டில் இருந்த மாணவி விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி, கடந்த 15 ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பூசாரி கைது செய்யப்பட்டாலும் வழக்கின் விசாரணை திருப்தியில்லை என்றும், பூசாரியை தப்பவைக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. செம்பேடு கிராமத்தில் கல்லூரி மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆறுதல் கூறினார். அப்போது அவரது காலில் விழுந்து இறந்துபோன மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க நியாயம் வேண்டும் என வானதி சீனிவாசனிடம் வேண்டுகோள் வைத்தனர்.
அவர்களிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்த வானதி சீனிவாசன் உரிய நீதி கிடைக்க பாஜக உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் முனுசாமியிடம் சிக்கியுள்ள 30க்கும் மேற்பட்ட இளம்பெண்ககளை மீட்க வேண்டும் எனவும், கல்லூரி மாணவி உயிரிழந்த பிரச்சினையை விட்டுவிடுங்கள் என அவரது குடும்பத்தினரிடம் முனுசாமி கூறியதாகவும் அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் எனவும் வானதி சீனிவாசனிடம் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், மாணவிக்கு சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததாகவும் காவல் துறை அலட்சியம் காட்டியதாகவும்அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதி விசாரணையில் திருப்தி இல்லை என்றும் உரிய நீதி கிடைக்க முதல்வரிடம் தேசிய மகளிர் ஆணையம் மூலம் எடுத்துச் செல்வோம் என கூறிய அவர், லாவண்யா வழக்கு போன்று இந்த பெண்ணின் உயிரிழப்பிற்கும் நீதி கிடைக்க பாஜக துணை நிற்கும் என தெரிவித்தார்