முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சில முத்தான குறிப்புகள்
தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை தூக்கி கடலில் எறிந்தாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன் அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம்… கவிழ்ந்து விடமாட்டேன்
கலைஞரின் கனத்த குரலில் ஒலிக்கும் இந்த வரிகளை சொல்லிவிடும் அனைத்தையும் மக்கள் மீது அவர் வைத்த அன்பையும் ….மக்களுக்காக உயிரையும் கொடுத்து தொண்டாற்ற நினைக்கும் மனதையும்….
பிறப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை
முத்தான பல திட்டங்களை மக்களுக்காக கொடுத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் அழகிய கிராமத்தில் முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மாளுக்கு ஜூன் 3 ,1924 ஆண்டு மகனாக இம்மண்ணில் உதித்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி .பின்பு தனது பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டார் .எண்ணற்ற பல சாதனைகளை புரிந்த இவர் மக்களால் அன்போடு பின்னாளில் கலைஞர் கருணாநிதி என்று அழைக்கப்பட்டார். இவருக்கு பெரியநாயகம் சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள்.
கலைஞர் அவர்கள் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர் இவரது முதல் மனைவி பத்மாவதி திருமணமான சிறிது காலத்திலேயே இறந்து விட்டார். இவரது மகன்தான் மு .க முத்து. இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் இவருக்கு பிறந்தவர்களே அழகிரி ,ஸ்டாலின் , தயாளன் மற்றும் தமிழரசு ஆகியோர். இவரது மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் இவருக்கு பிறந்த மகள் தான் கனிமொழி..
கல்வி மற்றும் படைப்புகள்
ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளிப் படிப்பின் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தார். ஆனால் எழுத்து, கவிதை, கதை ,திரைப்பட வசனங்கள், நாடகங்கள் , சிறுகதைகள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.
முதன்முதலாக மாணவர் நேசன் என்னும் தனது படைப்பை தொடங்கினார் .பின்பு 1942 ஆம் ஆண்டு முரசொலி என்னும் இதழை தொடங்கி அதனை வெற்றிகரமாக சென்னையில் நாளிதழ் ஆக கொண்டுவரும் அளவிற்கு உயர்த்தினார்.. “குடியரசு, முத்தாரம் ,தமிழரசு “போன்ற தனது படைப்புகளின் மூலம் அரசியலில் தான் கொண்ட ஆர்வத்தையும் உள்ளத்தில் உள்ள கேள்விகளையும் வெளியே கொண்டு வந்தார்.
இவர் முதன் முதலில் எழுதி அரங்கேறிய நாடகம் பழனியப்பன் 1944 இல் திருவாரூர் பேபி டாக்கீசில் வெளியானது.
முதன்முதலில் வசனம் எழுதிய திரைப்படம் ராஜகுமாரி. எம்ஜிஆர் முன்னணியில் நடித்த நாடகமாகும். கலைஞர் அவர்களை எம்ஜிஆர் ஆண்டவரே என்று தான் அழைப்பார்.
பராசக்தி ,மனோகரா, மந்திரி குமாரி ,மலைக்கள்ளன் போன்ற வெற்றிப்படங்களை தமிழ் திரையுலகின் நாயகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர் ,சிவாஜி ஆகியோருக்கு பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளார்.
“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ” “தென்றலைத் தீண்டியதில்லை ஆனால் தீயை தாண்டி இருக்கிறேன்” ” கோயில் கூடாது என்பதற்காக அல்ல அது கொடியவர் கூடாரமாக மாறி விடக்கூடாது” முத்தமிழ் அறிஞர் எழுதிய இவ் வாக்கியங்கள் யாவும் தீயாய் இவ்வுலகில் பேசப்பட்டு வந்தன
20 நாடகங்கள் 15 நாவல்கள் 15 சிறுகதைகள் 210 கவிதைகள் , உலகின் மிக நீண்ட எழுது தொடராக கருதப்படும் உடன்பிறப்பே நண்பனுக்கு போன்ற 7000த்திற்கும் அதிகமான கடிதங்களை எழுதியுள்ளார்.
இவரது படைப்புகளை ஒரு வரியில் அடக்க இயலாது அத்தனை அழகான எண்ணற்ற நூல்களையும் கவிதைகளையும் நாடகங்களையும் இந்த தமிழுலகிற்கு தமிழ் மக்களுக்கு தமிழுக்காக தந்துள்ளார்.
அரசியல் பயணம் ஆண்டு வாரியாக
1924 – ஆண்டவர் இவ்வுலகிற்கு தமிழ் மண்ணிற்கு வந்த நாள்
1942 – நீதிக்கட்சியின் தலைவராக இருந்த அழகிரிசாமியின் பணிகளால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஆர்வம் கொண்டார். அரசியலைச் சொல்லும் முரசொலி என்னும் இதழ் நிறுவப்பட்டது.
1953 – அரசியலில் களம் இறங்க முதல் படியாக கள்ளக்குடி ஆர்ப்பாட்டம்
1957 – மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ,
ஹிந்தி என்பது உணவு விடுதிகளில் இருந்து எடுத்துச்செல்லும் சாப்பாடு …ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு தமிழ் என்பது குடும்பத் தேவை அறிந்து விருப்பம் அறிந்து ஊட்டமளிக்கும் தாயிடம் இருந்து பெறப்பட்ட உணவு என்று மாநாட்டில் முழக்கமிட்டார்…
1961 – திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கலைஞர்.
1962 – தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967 – பொதுப்பணித்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969 – திமுக கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார் .மேலும் முதன் முதலாக தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.
1971 – மக்கள் சேவையில் சிறந்து விளங்கிய இவர் இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 to 1991 – எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 – மக்கள் நலனையே உயிராகக் கொண்ட கலைஞர் அவர்கள் நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
2006 – முத்தமிழ் அறிஞர் தமிழ் மண்ணுக்காக ஆற்றிய எண்ணற்ற சாதனைகளால் ஐந்தாவது முறையாக தமிழ் மண்ணின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதுகள்
1970 இல் உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கினார்.
கலைஞரின் படைப்பான தென்பாண்டி சிங்கம் என்ற புத்தகத்திற்காக ராஜா ராஜன் விருதை தமிழ் பல்கலைக்கழகம் வழங்கியது.
முஸ்லிம் சமூக நண்பர் என்ற பட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி வழங்கியது.
கலைஞர் குறித்த அழகிய தகவல்கள்
முத்துவேல் கருணாநிதி அவர்களை முதன்மதலாக கலைஞர் என்று பட்டம் சூட்டியவர் தமிழ் திரையுலகின் நாயகன் எம் ஆர் ராதா ஆவார். தூக்கு மேடை என்ற கலைஞரின் நாடகத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து போன அவர் பட்டத்தை வழங்கினார்.
தினமும் டைரி எழுதும் பழக்கம் இல்லாதவர் கருணாநிதி அது குறித்த கேள்விக்கு “என் மூளையை எனக்கு ஒரு டைரி” என்று கூறினார். அனைத்து நிகழ்வுகளையும் மிகத் துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பவர் கருணாநிதி.
தனது வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் முரசொலி மற்றும் குங்குமம் இதழ்களில் எழுதினார்.
அண்ணா அவர்களின் சொல் பேச்சு கேட்காதவர் கலைஞர் ஆனால் அவர் மறைவிற்குப் பிறகு திமுகவின் தலைவர் ஆகும் அளவிற்கு அவரின் மேல் பற்றுடையவர். தினமும் காலையில் அண்ணா அறிவாலயத்தில் நடை பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
ஆங்கில சொல்லில் சொல்லில் மெட்ராஸ் என்று அழைத்து வந்ததை சென்னை என்று பெயர் மாற்றம் செய்து அனைவரும் அன்பாக அழைக்கும் வண்ணம் செய்தார்.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் இலவச கண்ணொளி திட்டம் , மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்க்ஷா முறை ஒழிப்பு, ஆசியாவிலேயே பெரிய அளவிலான பேருந்து நிலையம், விதவை மறுமண நிதி உதவி ,சட்டக் கல்லூரி மருத்துவ கல்லூரி பல்கலைக்கழகம் போன்றவைகளை நிறுவியது, சொத்தில் பெண்ணுக்கு சம உரிமை சட்டம், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, பசுமைபுரட்சி திட்டம் போன்ற திட்டங்களை மக்களுக்காக கொண்டுவந்துள்ளார்
இவரின் சாதனைகள் எண்ணிலடங்காதவை நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை யாரும் செய்ய முடியாத வகையில் மிகச்சிறப்பாக மக்களுக்காக யோசித்து மக்கள் மகிழ்வாக வாழ பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்…
மறைவு
தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளையும் எழுத்து கதை நாவல் சிறுகதை போன்றவற்றால் மக்களின் மனதை ஈர்த்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் 2016ஆம் ஆண்டு சுவாச கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார் இன்று வயது மூப்பின் காரணமாக 2018 ஆம் ஆண்டு சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார்.
மண்ணுலகை விட்டு மாமனிதர் பிரிந்தாலும் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த முத்தமிழ் அறிஞர் இவ்வுலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருப்பார்….