ஆன்மிகம்ஆலோசனை

ராமாயணத்தில் பீமனா!

மஹாராஷ்டிர மாநிலம் பூனா மாவட்டம் ஸஹ்யாத்திரி மலைத்தொடரில் உள்ள டாகினி என்ற இடத்தில் ஒரு குன்றின் மீது சிறு கோவிலாக அமைந்துள்ளது பீமசங்கரம்.

"வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய முழுதுண்ட மாலுமிகலிக்
கண்டிட ஒண்ணுமென்று கிளரிப்பறந்தும் அறியாத சோதி…"
-திருஞானசம்பந்தர்

பீமசங்கரம்

ஸ்தல வரலாறு

ஒரு வனப்பகுதியில் கற்கடி-விராடன் என்னும் அரக்கத்தம்பதியர் வாழ்ந்து வந்தனர். கற்கடியின் பெற்றோரை கொன்ற முனிவர்களைத் தாடகை என்ற அரக்கியுடன் சேர்ந்து அழிக்கலானான் விராடன். விசுவாமித்திரரை அழிக்கும் பொருட்டு அவரின் வேள்வி செய்யும் இடத்தை நோக்கி அரக்கர் படையுடன் அவனும் வந்தான். அச்சமயம் மஹா விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் முனிவர்களுக்கு உதவியாக அங்கு காவல் புரிந்துக் கொண்டிருந்தார். வந்த அரக்கர் கூட்டம் அழிக்கப்பட்டது. விராடன் இறந்தான்.

சிறிதுகாலம் கழித்து கும்பகர்ணன் அக்காட்டிர்க்கு வருகையில் கற்கடியை மணந்தான். அவனுக்கு பல மனைவிமார்களுள் இவளும் ஒருவள். சிறிது காலம் இவளோடு வாழ்ந்தான். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பீமன் என்று பெயர்சூட்டி அவனை வளர்த்து வந்தாள்.

பீமன் பெரியவனானான், கற்கடி விராடன் மற்றும் கும்பகர்ணனைப் பற்றி கூறினாள். இராமபிரான் மீது சினம் கொண்டவன் அவர் வைகுண்டத்தை அடைந்துவிட்டதை அறிந்து கோபம் அதிகரிக்க தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்த பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்று பூவுலகின் அரக்க அரசனானான். தேவலோகத்தை படையெடுத்து வெற்றியடைந்தவன் அவர்களை கொடுமை படுத்தினான். பீமனுக்கு அஞ்சிய தேவர்கள் வனப்பகுதியில் எம்பிரான் மீது தவம் செய்தனர். அவரும் காட்சியளித்து தக்க சமயத்தில் பீமனை வதம் செய்வேன் என்று வரமளித்தார்.

காமரூபம் என்னும் நாட்டின் அரசர் பிரியதருமன். இவர் சிறந்த சிவபக்தர். பீமன் அவரை போரில் வென்று அவரையும் அவரின் மனைவியையும் சிறைபிடித்து மிகவும் துன்புறுத்தினான். பிரியதருமர் தன் மனைவியுடன் சிறையிலேயே சிவலிங்கம் ஒரு வைத்து பூஜை செய்யலானான். இதனை சிறை காவலர்கள் பீமனிடம் கூறினர். பீமன் சினம் கொண்டு தன் சூலத்தை எடுத்துக் கொண்டு மிகுந்த ஆவேசத்துடன் சிறைச்சாலையை நோக்கி சீறி பாய்ந்தான். சூளத்தை லிங்கத்துமேல் வீசியக் கணம் ஜோதி தோன்ற அதிலிருந்து எம்பிரான் ருத்திர மூர்த்தியாய் தம் சூலத்தை வீச பீமனின் சூலம் நொறுங்கியது. போர் மூண்டது சிவபெருமானும் பீமனும் வெகு நேராக சண்டையிட்டனர். அப்பொழுது நாரதர் எம்பிரானிடம் “இந்த அரக்கனுக்கு ஏன் அப்பனே இவ்வளவு நேரம்” என்று கேட்டவுடன் நெற்றிக்கண்ணிலிருந்து வந்து நெருப்பில் சாம்பலானான்.

சிறைச்சாலையில் இருந்த முனிவர்களை, பிரியதருமன் மற்றும் பலருக்கு விடுதலை கிட்டியது. பிரியதருமன் ஐயனிடம் வேண்டியதில் அங்கேயே ஜோதிர்லிங்கமாக காட்சியளித்து அருள்கிறார்.

மேலும் படிக்க : மஹாளய பக்ஷ 16 நாட்கள் என்ன செய்யணும் தெரியுமா?

பெயர்காரணம்

படைத்தல், காத்தல், அழுத்தம், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களை புரிந்து எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை செய்வதனால் சிவபெருமான் சங்கரன் என்று அழைக்கபடுவதோடு; பீமன் என்னும் அரக்கனால் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக நிலை பெற்றமையால் பீமசங்கரர் என்று வணங்கபடுகிறார் மற்றும் அத்திருத்தலம் பீமசங்கரம் என்று அழைக்கப்படுகிறது.

சிறப்பம்சம்

பீமா ஆறு இக்கோவிலை சுற்றி ஓடுகிறது. மோக்ஷ குண்டம், ஸர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் இங்கு உள்ளது. மோக்ஷ குண்டதில் நீராடி பீமசங்கரரை வழிப்பட்டால் மோக்ஷம் கிடைக்குமாம். அமைதி, மகிழ்ச்சி யாவும் பெறுவதுடன் இம்மலை மூலிகை நீரால் நோய்கள் நீங்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *