அஞ்சறை பெட்டி…வெந்தயத்தின் மகிமை தெரியுமா…!
சமையல் அறையில் அன்று முதல் இன்று வரை நீங்காத இடம் பெற்றிருக்கும் அஞ்சறை பெட்டி. அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருட்களில் மிகவும் மருத்துவ குணம் நிறைந்த வெந்தயத்தை பற்றி இங்கு காண்போம். மேலும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். நாம் சமையலுக்கு உபயோகிக்கும் அஞ்சறை பெட்டி பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு நோயை போக்கும் மருந்தாகவும், நோய் எதிர்ப்புள்ள மருந்தாகவும் பயன்கொண்டது. இதில் வெந்தயம் சர்க்கரை நோய்க்கு மிக அற்புதமான மருந்தாகும்.
நீரிழிவு
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது. நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு ஆகிய மூன்று நோய்க்கும் ஒரு பொது மருந்தாக வெந்தயம் உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வெந்தய கீரை மிகவும் நல்லது. வெந்தய கீரை உடலுக்கு ஊக்கத்தை தர கூடியது. இக்கீரையை வீட்டில் எளிதாக நாமே குறைந்த செலவில் வளர்க்கலாம். ஒரு சிறிய தொட்டி அல்லது சட்டியில் மண் நிறைப்பி இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து அந்த தொட்டியில் போட்டு தினமும் தண்ணீர் தெளித்து வந்தால் இயற்கையான வெந்தய கீரையை நாம் வீட்டிலேயே எளிதாக வளர்க்க முடியும். நமது தொட்டியின் அளவை பொறுத்து வெந்தயத்தை அதிகமாக பயிரிடலாம்.
வெந்தய கீரை
அதிக இரும்பு சத்து கொண்ட இந்த கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டால் கண்கள் தொடர்பான நோய்கள் வராது. தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் இரண்டு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொண்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து விடும் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கரையும் நார் பொருள் தான் இதயத்தில் கொழுப்பு படியாமல் இருக்க உதவுகிறது. கரையாத நார் பொருளோ மலச்சிக்கலை நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். வெந்தயத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து, நம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
முடி வளர்ச்சி
வெந்தயத்தை அளவுக்கு அதிகமா உபயோகித்தால் கசப்பு தன்மை அதிகரிக்கும். மோரில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி பளபளப்பாக இருப்பதுடன், உடலுக்கு குளிர்ச்சியை தரும். மேலும் தலையில் பொடுகு தொல்லை விரைவிலேயே குணமாகும்.முடியின் நிறமும் கருமையாகும்.சிறிது வெந்தயம், சிறிது சோம்பு,சிறிது உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுத்தால் பேதி குணமாகும்.
சிறிது வெந்தயத்துடன், பூண்டை தட்டி போட்டு அரிசி கஞ்சி செய்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.இளம் தாய்மார்களுக்கு தாய் பால் சுரக்கும். வெந்தயம் சிறுநீரக கற்களை கரைக்க கூடியது அல்லது கற்கள் வராமல் தடுக்கும் வல்லமை கொண்டது.சிறுநீரை பெருக்கி கற்கள் வராமல் தடுக்கிறது.
சூட்டை தணிக்க
கோடை காலத்தில் வெயில் சூடு அதிகரிக்கும் குறிப்பாக கல்யாணம் ஆகாத இளம் பெண்கள், இரவில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயத்தை அதிகாலை நேரம் எழுந்து நன்றாக மைய அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் வெப்பம் குறைவதோடு, கண்ணுக்கும் உடம்புக்கும் குளிர்ச்சி தரும். முகத்தில் உள்ள பருக்கள், சரும பிரச்சனைகள் நீங்கும். வாரத்தில் மூன்று நாட்கள் இவ்வாறு குளித்து வந்தால் நல்ல பலன் தரும்.
மேலும் படிக்க
பணிச்சூழல் காரணமாக பெரும்பாலானோர் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா..??