யாரையும் சார்ந்திருக்காதே
நம் அன்றாட வாழ்க்கையில் நம் வேலைகளுக்காகவோ, அல்லது பிறருடைய தேவைகளுக்காகவோ, எவரேனும் ஒருவரை சார்ந்தே உள்ளோம். அந்த தேவை உணவாக இருக்கலாம், இருப்பிடமாக இருக்கலாம் அல்லது உடல் தேவையாக இருக்கலாம். அடிப்படை தேவைகள் இவை என்பதால் இந்த தேவைகளை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
பிற தேவைகள்:
மனிதனுக்கு உண்ண உணவு, உறங்க இடம், உடல் தேவைக்கும் மன தேவையான அன்பிற்கு ஒரு துணை போன்றவை அடிப்படை தேவையாக இருந்தாலும், அவ்வப்போது வரும் துன்பங்களுக்கு, மனிதன் ஏதேனும் பொருளின் தேவையை நாடுகிறான். ஆறுதலான மனிதர்களை நாடுகிறான் மற்றும் பொழுதுபோக்கை நாடுகிறான். இது தவிர்த்து தன் பாதுகாப்பிற்காகவும் தன் குடும்பத்தாரின் பாதுகாப்பிற்காகவும் அரசாங்கத்தின் அரனை நாடியிருக்க வேண்டி உள்ளது. ஆகவே மனிதனின் தேவைகளை பட்டியலிட வேண்டும் என்றால் இப்படி ஒவ்வொரு நொடியும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஏன் இவ்வளவு தேவை?
எங்கிருந்து இவ்வளவு தேவைகள் பிறக்கின்றன? ஏன் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றிற்காக அழைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்? சில நிமிடங்கள் கூட எந்த ஒரு துணையும் இல்லாமல் மனிதனால் தனித்து வாழ இயலவில்லையே ஏன்?
இதற்கான பதில்
இவ்வளவு தேவைகளை பூர்த்தி செய்ய மனிதன் புறத்தில் அனைத்தையும் தேடுகின்றான். தேவையின் பிறப்பிடம் ஆசை என்பதை மறந்து அங்கும் இங்கும் அழைந்து கொண்டு இருக்கிறான். தான் ஒரு சௌகர்யமான இடத்தில் இருக்க வேண்டும், தன் தேவைகளை பிறர் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற மனபோதையில் திரிந்து கொண்டிருக்கிறான். இதுவே அவனின் நிலையற்ற தேடும் பணியில் அவனை மூழ்கச் செய்கிறது.
துணையின் தேவை கருதி தெளிவாகுங்கள்
அப்படியென்றால் எதற்கும் எவரையும் நாடி செல்ல கூடாதா? துணையே வேண்டாம் என்று தனித்திருக்க வேண்டுமா? என்று கேட்டால், அப்படி இல்லை.
நம் தேவை என்னவென்பதில் ஒரு தெளிவுநிலை பிறக்க வேண்டும். நாம் பயணப்பட்டு கொண்டிருக்கும் பாதை உண்மையில் நமக்கானதா? என்பதில் கட்டாயம் ஒரு புரிதல் வேண்டும். பிறகு அந்த தேவைக்கு ஏற்ப, துணையை நாட வேண்டும். அந்த துணை உயிருள்ள அல்லது உயிரற்ற துணையாகவும் இருக்கலாம். இவ்வாறான புரிதல்கள் வந்த பிறகும், அந்த துணையின் நிழல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்திக் கொள்வது மிக முக்கியம்