பார்லி வித் வெஜிடபிள் மசாலா ரைஸ்
நாம் உண்ணும் உணவில் நமக்குத் தேவையான ஆரோக்கியத்தை தரும் உணவுகளில் பார்லியும் ஒன்று. இதற்கு வாற்கோதுமை என்ற பெயரும் உண்டு. பார்லியை வறுத்து மூன்று பங்கு தண்ணீர் வைத்து உப்பு சேர்த்து கஞ்சியாக செய்தும் சாப்பிட்டு வரலாம். கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக தருவார்கள்.
கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி சிறந்த மருந்தாக இருக்கும். இதை அடிக்கடி சாப்பிடுவதால் நரம்புகள் வலுப்படும். பார்லியை மாவாக அரைத்து வைத்துக் கொண்டு சப்பாத்தி செய்யும் போது சிறிது மாவை பயன்படுத்தி சப்பாத்தி செய்து சாப்பிடலாம். மாதம் இரண்டு அல்லது மூன்று முறை இதைப் உணவில் சேர்த்து வரலாம். உடல் பருமனை குறைபதற்கு பார்லியை மசாலா சாதமாக செய்து சாப்பிட்டு வரலாம்.
பார்லி வித் வெஜிடபிள் மசாலா ரைஸ்
தேவையான பொருட்கள் : பார்லி 200 கிராம், பீன்ஸ் 25 கிராம், கேரட் 25 கிராம், உருளைக்கிழங்கு 25 கிராம், பட்டாணி 25 கிராம், வரமிளகாய் 3,வெங்காயம் 2, தக்காளி 1, பட்டை, கிராம்பு தலா ஒன்று, கரம் மசாலா அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் கால் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை விளக்கம் : பார்லியை ஊற வைத்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பீன்ஸ், கேரட் , வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்து, பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, வரமிளகாய், கொத்தமல்லி ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒன்றாக வதக்கி வேக வைத்த பார்லி சேர்த்து கலந்து கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
உடல் பருமனைக் குறைப்பதற்கும், நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த பார்லியை வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள் கஞ்சி சாப்பிட பிடிக்காதவர்களுக்கும் இந்த முறையில் சமைத்து கொடுக்க சுவையாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள்.