வாழைத்தண்டு சீஸ் பால் ரெசிபி
உடல் எடையை குறைப்பதற்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை தடுக்கவும், வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகும். நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கவும், வாழைத்தண்டு உதவுகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும். வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இதை கொடுத்து வரலாம். மேலும் செரிமானத்தை எளிதாக்கும். மாற்றத்திற்கு உதவுகிறது. அசிடிட்டி அமிலத் தன்மையால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
நெஞ்சு உறுத்துவது, நெஞ்செரிச்சல் போல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து வாழைத்தண்டு. வாழைத்தண்டை பொரியல், சாறெடுத்து ஜூஸ் ஆகவும் பருகலாம்.
வாழைத்தண்டு சீஸ் பால்
தேவையான பொருட்கள் : வேக வைத்து தோலுரித்து மசித்த உருளைக்கிழங்கு 100 கிராம், வாழைத்தண்டை நார் நீக்கி நறுக்கியது அரை கப், பெரிய வெங்காயம் நறுக்கியது கால் கப், பச்சை மிளகாய் 2, தேங்காய் துருவல் 2 ஸ்பூன், முந்திரிப்பருப்பு ஒரு ஸ்பூன், இஞ்சி,பூண்டு விழுது அரை ஸ்பூன், சீஸ் அரை கப், கரம் மசாலா கால் ஸ்பூன், சீரக தூள் கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு. சோள மாவு கால் ஸ்பூன், வறுத்த சேமியா அரை கப், தக்காளி சாஸ், மயோனைஸ் தேவைக்கு ஏற்ப.
செய்முறை : மசித்த உருளைக்கிழங்கு, வாழைத்தண்டு, வெங்காயம், முந்திரி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சிறிது தண்ணீரில் சோளமாவை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும். உருளைக்கிழங்கு கலவையை ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து தட்டவும்.
ஒரு துண்டு சீஸ் எடுத்து நடுவில் வைத்து உருண்டை சோள மாவு கலவையில் தோய்த்து வறுத்த சேமியாவில் புரட்டி எடுத்து வைக்கவும். பிறகு இந்த உருண்டைகளை கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் வாழைத்தண்டு சீஸ் பால் ரெடி. தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் உடன் பரிமாறலாம்.