குழந்தை தெய்வம் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி
கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து. கூப்பிட்டவுடன் உங்களை கை தட்டி கொண்டு உங்களை சுற்றி சுற்றி வரும் சின்ன குழந்தை தெய்வம் தான் பாலா என்கின்ற பால த்ரிபுரசுந்தரி.
நித்ய கல்யாணத்தை நமக்கு அளிக்கும் பாலாவின் அழகோ , அழகு.அவள் கருணை பார்வை நம்மை பார்த்து அருள, அவளின் திரு உருவை நாம் பார்த்து மகிழ, அவள் எப்படி இருப்பாள் , எத்தனை அழாகாக இருப்பாள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா!
பாலையை வர்ணிக்கும் பாடலும் அதன் அர்த்தமும் வாருங்கள் பார்ப்போம்.
பாடல்
அருண கிரண ஜாலை: அஞ்ஜிதாவகாசா
வித்ருத, ஜபவடீகா புஸ்தகா பீதி
ஹஸ்தா இதரகர வராட்யா, புல்ல கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா
அர்த்தம்
இளஞ்சிவப்பு ஒளி வெள்ளத்தில் கையில் புஸ்தகம், ஜபமாலை ஆகியவற்றோடு அபயமும் வரமும் அருளுபவளாய் ப்ரகாசிக்கின்ற புன்னகையோடு வெண்மையான கல்ஹார புஷ்பத்தில் (அல்லி மலரில்) அமர்ந்திருப்பவளாக அவள் தியானிக்கப்படுகின்றாள்.
பாலா த்ரிபுரசுந்தரியின் த்யான ஸ்லோகம் “புல்ல கல்ஹார ஸம்ஸ்திதா” என்று சொல்லியிருப்பதாலும், சம்ப்ரதாயத்தில் பாலையின் சித்திரங்களில் அவள் அல்லி மலரின் மேல் அமர்ந்திருப்பதாகவே சித்திரித்திருப்பதாலும், “அமர்ந்த திருக்கோலத்திலேயே” சிற்பம் வடிக்கப்பட்டது. இளவரசிக்குள்ள சிறிய நெற்றிப் பட்டயம் (அரசிக்குரிய பெரிய கிரீடமல்ல), மலர்ந்த சிரிக்கும் கண்கள், சிறுமிக்கே உரிய பூரித்த கன்னங்கள், அற்புதப் புன்னகை, புத்தகம், ஜபமாலை, அபய வரத ஹஸ்தங்கள், வீராசனம்.
குழந்தைகளிடம் இருக்கும் அந்த வசீகரம் தெய்வீகமானது.
தனக்கு அன்னியமாய் ஏதுமில்லாததும், நாம-ரூப-குணங்களற்றதும், நித்ய ஸத்யமானதுமான ஸச்சிதானந்தத்தையே “பரப்ருஹ்மம்” என்று ஞானிகள் அறிகிறார்கள். அதே பரப்ருஹ்மம் ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரமாகிய கார்யங்களில் ஈடுபட்டிருப்பதாக வ்யவஹரிக்கும்போது “பராசக்தி” என்பதாக வேதங்களால் கொண்டாடப்படுகிறது.
பாலா உபாசனை
மந்திரம் -யந்திரம் – தந்திரம் ஆகியமூன்றினாலும் அம்பிகையை உபாசிப்பது “ஸ்ரீ வித்யை” வழி. அதன் முதல் படி “பாலை” என்று குறிக்கப்படும் “பாலா த்ரிபுர சுந்தரி” உபாசனை. இது மந்திர ரூபம் மட்டுமே கண்ட உபாசனையாக மந்திர ஜபத்தையே ப்ரதானமாகக் கொண்டிருப்பதே மரபு.
ஆயினும் சாஸ்திரங்களில் “பாலா”வுக்கான ப்ரத்யேகமான யந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.
லலிதா பரமேஸ்வரியாகிய ஜகன்மாதாவின் புத்ரியாக முதிராத கன்னிகையாக பாலாவை வர்ணிக்கிறது லலிதோபாக்யானம். பண்டாசுர யுத்தத்தில் அன்னையின் சேனையில் பங்கேற்று “பண்ட புத்ரர்களை வதம் செய்து தன் விக்ரமத்தால் அன்னையை மகிழச் செய்தவள்” (லலிதா ஸஹஸ்ரநாமம் – 74ஆம் நாமம்”) மற்றும் ஸ்ரீபாலாயி நம: (965ஆம் நாமம்) என்று அவளை லலிதா பரமேஸ்வரியாகவே ஸ்துதிக்கிறது.
ஸ்ரீ வித்யோபாசனையின் முதல் படியாக “பாலா” இருப்பதாலும் அவள் “அருண கிரண ஜாலா” வாக இருப்பதாலும் தானோ என்னவோ அருட்கவியான அபிராமி பட்டரும் கூட “உதிக்கின்ற செங்கதிர்” – “உச்சித் திலகம்” – “மாணிக்கம்” – “மாதுளம்போது” – “குங்குமத்தோயம்” என்றெல்லாம் இளஞ்சிவப்பின் வர்ணனையையே தன் அந்தாதியின் முதல் பாடலாகப் பாடினார். “அல்லியந் தாமரைக் கோவில் வைகும் யாமள வல்லி” (பாடல் 96) என்று அல்லி மலரில் எழுந்தருளும் பாலையும் தாமரைத் திருவான மஹாலக்ஷ்மியும் அபிராமியின் வேறு வடிவங்களே.
ஸ்ரீ மாத்ரே நமஹ !
மேலும் படிக்க : புரட்டாசி புதனில் பெருமாள் தரிசனம்