பழங்காலத் தமிழகம் தடைதாண்டி பாயும் நதிகள் பகுதி 2
தடைகள் தாண்டி பாயும் வைகை :
வைகை ஆறும் அதனின் கிளை ஆரண சுருளி ஆறும் சுருளி மலையில் இருந்து வளைந்து நெளிந்து சின்னனூர், மதுரை வழியாக கிழக்கு நோக்கிப் பாய்ந்து ஓடி, இடைக்கால நகரங்களான திருப்புவனம், ராஜகம்பீரம், மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி ஆகிய ஊர்களைக் கடந்து பின்னர் இராஜசிங்கமங்கலம், இராமநாதபுரம் ஆகிய பெரும் கண்மாய்களை நிரப்பி இறுதியில் அழகன்குளம் அருகே வங்கக்கடலில் சென்று கலக்கிறது.இப்பகுதியானது, தென்மேற்கு பருவ மழையாலும் வடகிழக்கு பருவ கனமழையாலும் நீர்வளம் பெற்று இரு போக விளைச்சல்களையும், வாழை, கமுகு போன்ற சமவெளிப்பகுதி பயிர்களையும், மலைச்சரிவுகளையும் ஏலக்காய் போன்ற பயிர்களையும் அளித்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிவருகிறது. வைகை சமவெளியின் தலைப்பகுதி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் நறுமணப்பொருட்களை கிழக்குப் பகுதியிலுள்ள நகரங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வணிகப்பெருவழியாக திகழ்ந்திருக்கின்றது. சங்க இலக்கிய நூல் தொகுதிப்புகளில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் எட்டு செய்யுள்கள் வைகை ஆற்றின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன. அதுபோன்று, மதுரைக்காஞ்சி எனும் சங்க இலக்கிய நூலும் மதுரை நகரத்தின் மேன்மையினை விரித்துரைக்கின்றது.
தூங்காநகரத்தின் தொன்மை வரலாறு:
இந்தியாவிலுள்ள பழம்பெரும் நகரங்களுள் ஒன்றான மதுரை, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தற்காலம் வரை தொடரும் பெருமை கொண்டது. பழம்பெரும் பண்பாட்டு மேன்மையினால் மதுரை நகரம் ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ் ‘ என்று போற்றப்படுகிறது. மிக நெடுங்காலமாக இந்நகரம் கல்வி வளர்க்கும் பெரும் மையமாக விளங்கி வந்தது யாவரும் நன்கு அறிந்ததே. சங்க இலக்கியத்தில் கூறப்படும் சங்கம் இங்கு தான் அமைக்கப்பட்டிருந்தது. போற்றத் தக்கவகையில் வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளைப் பெற்றிருந்தது.
மதுரைக்கு வடக்கே சில கற்கால கற்கருவிகளும் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஆவியூர் என்ற ஊரில் பழங்கற்கால மற்றும் புதியகற்கால தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், மதுரை மாவட்டத்தில் சுமார் 60 இடங்களில் பெருங்கற்காலப் பண்பாட்டு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய கிரேக்க, ரோமானியர்கள் பாண்டிய மன்னர்கள் குறித்து அவர்களின் தலைநகரான மதுரை பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். கி.மு.320 – இல் ஆட்சி செய்த சந்திரகுப்த மௌரியர் அரசவையில் கிரேக்க நாட்டு மன்னன் செலுக்கஸ் நிகேதர் அரசு தூதுவராக இடம்பெற்றிருந்தவர் மெகஸ்தனீஸ். இவர் தென்னகத்தில் நிலைபெற்றிருந்த அரசுகள் பற்றி மிகவிரிவாக தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
ஸ்டிரோபா எனும் ரோமானிய பயணி (கி.மு 25) தன் நூற்குறிப்பில் ரோமாபுரியில் அகஸ்டஸ் பேரரசுக்கு பாண்டிய மன்னன் தூதுவர் ஒருவரை அனுப்பிய செய்தியினை குறிப்பிடுகிறார். இதே போன்று பிளினி (கி.பி. 75) பாண்டிய மன்னன் மற்றும் பாண்டியரின் தலைநகர் மதுரை குறித்து குறிப்பெழுதியுள்ளார். மேலும் கி.பி. 130- ஆம் ஆண்டில் தாலமி என்பவரும் மதுரையை பாண்டியர்களின் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அர்த்தசாஸ்திரம்:
கௌடில்யர் தனது அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் வடஇந்திய மற்றும் தென்னிந்தியாவில் நிலவிய வணிக பரிமாற்றம் பற்றி கூறுகையில் பாண்டிய நாட்டில் விளையும் நன்முத்துக்கள் குறித்து, மஸ்லின் என்றழைக்கப்படும் ஆடை குறித்து எழுதியுள்ளார். இது போலவே, வானவியல் அறிஞர் வராகமிகிரர் தனது பிருகத்சம்கிதையில் பாண்டிய அரசை பற்றி கூறியுள்ளார். புகழ்பெற்ற வடமொழிக் கவிஞர் காளிதாசர் தன் காப்பியத்தில் மன்னன் ரகுவால் ஆட்சி செய்யப்பட்ட ஒரு பகுதியாக பாண்டிய அரசு விளங்கிற்று என்று குறிப்பிட்டுள்ளார்.
அசோகரின் 2 மற்றும் 13-ஆம் பாறைக் கல்வெட்டுகள் தென்னகத்தில் சோழ, பாண்டிய, சத்யபுத்ர மற்றும் கேரளபுத்ர அரசுகள் இருந்தன என்று குறிப்பிடுகின்றன. இதே கால கட்டத்தைச் சார்ந்த மதுரைப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ள தமிழிக் கல்வெட்டுகளில் மதுரை மற்றும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன.
மதுரையில் சமணம் :
கர்நாடகா மாநிலத்திலுள்ள சரவணபெலகோலா எனும் இடத்துக்கு பத்ரபாகு தலைமையில் இடம் பெயர்ந்த சமணர்களால் தென்னிந்தியாவில் சமணம் பரவியது என்று கூறப்படுகிறது. மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சமணர்கள் தமது தனித்த வாழ்வை மேற்கொள்ளப் பொருத்தமான இடங்களாக விளங்கின. மதுரையைச் சுற்றி அமைந்திருந்த இயற்கையான பாறைக் குகைகளைத் தேர்வு செய்து குடியேறினர். இவ்வாறு பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட 14 குகைகளை, மதுரையைச் சுற்றி காண முடியும். இந்த மலைக் குகை பகுதிகளில் கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான எழுத்தமைதியில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் பழமையானது ஐந்து தமிழிக் கல்வெட்டுகளைக் கொண்டு திகழும் மாங்குளம் ஆகும்.