சில்லி முட்டை ஆம்லெட் ரைஸ்..!!
சில்லி முட்டை
தேவையான பொருட்கள் : வேக வைத்த முட்டைகள் 5, எண்ணெய் 3 ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் சிறிது, உப்பு தேவைக்கு ஏற்ப. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், பச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் அரை ஸ்பூன், சர்க்கரை அரை ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் ஒரு ஸ்பூன்.
செய்முறை : வேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், புளி கரைசல், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும். நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சில்லி முட்டை தயார்.
ஆம்லெட் ரைஸ்
தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி கால் கிலோ, குடைமிளகாய் இரண்டு, வெண்ணை அல்லது நெய் ஒரு ஸ்பூன், கோஸ் அரை கப், வெங்காயத்தாள் கால் கப், முட்டை 5, கொத்தமல்லி ஒரு ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு. கறிவேப்பிலை சிறிது, கேரட் அரை கப்.
செய்முறை : முட்டையை அடித்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது நெய்யை விட்டு காய்ந்ததும், முட்டை கலவையை தோசையாக ஊற்றி எடுக்கவும். இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து விரல் நீள அகலத்தில் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கேரட், கோஸ், விதை நீக்கி குடை மிளகாய் ஆகியவற்றை முட்டை போலவே மெல்லியதாக வெட்டி வைத்து வைக்கவும். வெங்காயம் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் ஊற்றி கேரட் , கோஸ், குடமிளகாய் போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வேக வைத்த சாதத்தை வதக்கிய காய்கறி உடன் முட்டை ஆம்லெட், துண்டுகளையும் சேர்த்து மெதுவாக போட்டு கிளறி சில நிமிடங்கள் மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.