சனி ஒழிஞ்சது.. இனி அமோகம் தான்” – முன்னாள் அமைச்சர் சூசகம்..!
அதிமுகவை பிடித்த சனி ஒழிஞ்சதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியது அதிமுகவினரிடையே மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019ம் ஆண்டில் இருந்து அதிமுக ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த பாஜக தற்போது, உள்ளாட்சி தேர்தலில் பிரிந்துள்ளது. இதற்கு நயினார் நகேந்திரனின் பேச்சு தான் காரணம் என அதிமுகவினர் சிலர் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் வருகிற பிப் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் அதிமுகவினர் போட்டியின்றியும் தேர்வாகியுள்ளனர். அதேபோல் திமுகவும் போட்டியின்று வெற்றி பெற்றுள்ளது.
இது தொட்ர்பாக விசாரிக்கையில் உள்ளூர் அரசியலின் அட்ஜஸ்ட்மெண்ட் தான் காரணம் என கீழ் மட்ட தொண்டர்கள் குமுறி வருகின்றனர். இதனையடுத்து திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதேபோல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரடியாக வக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிமுகப்படுத்திவைத்தார்.
அப்போது பேசிய அவர், “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை அதிமுக பெறவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியை மக்கள் விமர்சனம் செய்யும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், வழக்கமாக ஜாதகம் பார்க்கும்போது சனி, கேது என வேண்டாத கிரகங்கள் இருப்பதாக ஜோதிடர் கூறுவார். தற்போது அந்த வேண்டாத கிரகங்கள் (பாமக, பாஜக) எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலைச் சந்திக்கிறோம். இதுவும் அதிமுகவுக்கு வெற்றிக்கு காரணம்” என்றார்.