அபிராமி அந்தாதி 13-15 பாடல்கள் விளக்கவுரை
அபிராமி அந்தாதி பாடல்கள் 13முதல்15 பாடல்கள் அன்னையின் அருள் தரும் பாடல்கள் ஆகும். அபிராமி பட்டரால் பாடப்பட்டது. தினம் 3 பாடல்கள் பக்தியுடன் பாடி வர வளம் பெறலாம். ஆன்மா தெளிவடையும், அபிராமி அந்தாதி பாடல்கள் கண்ணதாசன் அவர்கள் விளக்கவுரையுடன் கொடுத்துள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.
13. வைராக்கிய நிலை எய்த
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
14. தலைமை பெற
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.
மேலும் படிக்க : கிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரம் இன்று
ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்!
நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!
மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்