அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
அன்னை அபிராமி அம்மன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது. இப்பாடலை படித்தால் பிரிந்த உறவு மீண்டும் ஒன்று சேரும்.
பாடல் வரிகள்:
76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
பாடல் விளக்கம்:
ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக் கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும் விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக அமர்ந்தவளே!