அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
அபிராமி தேவியின் அருளால் அனைத்து நிலைகளையும் மறந்து தேவி தேவனின் அருளால் வாழ்வில் இன்பம் பெற
பாடல் வரிகள்:
43. தீமைகள் ஒழிய
பரிபுரச் சீறடிப்! பாசாங்குசை! பஞ்சபாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
பாடல் விளக்கம்:
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!