ஆன்மிகம்ஆலோசனை

வைரம் ,முத்து போன்ற நவரத்தினங்களை அடைய அபிராமி அந்தாதியின் பாடல்-37

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பொன் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நவரத்தினங்களில் ஒன்றை சிறிய ஒரு மோதிரம் அளவு கூட செய்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். வைரம் முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் நம்மிடம் சேர அபிராமி அந்தாதியின் பாடல் இதோ உங்களுக்காக!!!

நவமணிகளைப் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

பாடல் விளக்கவுரை

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும் மலர்க் கொத்து மாகும். தாமரை மலர் போன்ற மேனியில் அணிந்து கொள்வது மென்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலை கொண்ட இடையில் அணிவது பலவிதமான நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமே ஆகும். அனைத்து செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டு திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ !

மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *