அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
இப்பாடலில் அபிராமி அன்னையார் மற்றும் ஈசனும் இனைந்து அர்த்த நாரிஸ்வரர் கோலத்தில் எழுந்தருளினார்
31. மறுமையில் இன்பம் உண்டாக
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
பொருள்:
அன்னையாம் உமையும், உமையைத்தம் இடப்பாகத்தில் கொண்ட அண்ணலாம் ஈசனும் இணைந்தபடி ஒருவராக அர்த்த நாரீசுவரக் கோலத்தில் எழுந்தருளி, பக்குவமில்லாத எளிய வனான என் போன்றோரையும் தங்கள் திருவடிகட்கு அன்பு செலுத்துமாறு நெறிப்படுத்தினார். அதன் விளைவாக இனி இதைப் பின்பற்றுவோம் என்றெண்ணத்தக்க வேறு சமயங்கள் ஏது மில்லை. என் பிறவிப் பிணி அகன்றுவிட்டதாதலால் இனி என்னை ஈன்றெடுக்கத்தக்க தாயும் இல்லை. மூங்கிலையொத்த தோளினைப் பெற்ற மங்கையர் பால் கொண்டிருந்த மோகமும் இனி இல்லை.