அபிராமி அந்தாதி பாடலும் விளக்கமும்
அபிராமி அன்னையின் பாடலை உச்சரித்தால் செல்வம் பெருகும்
அபிராமி அந்தாதி
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்
பாடல் வரிகள்:
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!
பாடல் விளக்கம்:
அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!