அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க அபிராமி அந்தாதியின் பாடல் -30
நம் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள்,பிரச்சினைகள் அனைத்தும் வரும்.பிரச்சினைகள் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணாமல் இவை அனைத்தும் கடந்து செல்வது தான் சிறந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்பதை அறிய வேண்டும்..
நமது அபிராமி தாயின் பாடல் வரிகளை படித்து தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்க வழி செய்வோம்!!!
பாடல்
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!
விளக்கம்
நான் ஒன்றும் அறியாத சின்ன குழந்தையாய் இருந்தபோதே நான் புண்ணிய பாவங்களை எல்லாம் செய்து சுழல் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் உன் அடியவனாக என்னை எற்று ஆண்டு கொண்டாய்.
அப்படி உன் அடிமையாக ஏற்றுக்கொண்ட என்னை இல்லை என்று கூறுவது உனக்கு ஏற்றது ஆகுமோ?? இனிமேல் நான் என்ன செய்தாலும் ,அறிவின்றி நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும் என்னை காப்பாற்றி கரை கொண்டு சேர்ப்பது உன்னுடைய திருவுள்ளம் தானே!!
இறைவா என்னும் போது ஒன்றாகவும், அவரவர் தன் மனதிற்கு ஏற்றவாறு உருவங்களை வைத்து வணங்கும் போதும்,இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு அருவமாகவும் இருக்கும் என் அன்னை உமையவளே!!!
நான் முட்டாள்தனமாக என்ன செய்தாலும் என்னை காக்க வேண்டியது உன் கடமை என்று கூறுகிறார் பட்டர். பிறவி என்பது பெருங்கடல்.அதில் ஓடங்கள் நாம். செலுத்துகிறவன் இறைவன். நம் மனம் தான் அதில் துடுப்பு. நம்முடைய மனதின் வழியாக நல்ல வழியிலோ தீயவழியிலோ செலுத்துகிறவன் அதில் இருந்து நம்மை காப்பான் என்கிறார் பட்டர். நம்மை இறைவன் காப்பான் என்கிற நம்பிக்கை நமக்குள் இருந்தால் போதும்..எதையும் கடந்து விடலாம்…
இந்த பாடலால் நமக்கு அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்கும்