அபிராமி அந்தாதி பாடல் உரை விளக்கம்!
அபிராமி அந்தாதி உலகின் நன்மைத் தரக்கூடிய அன்னை அபிராமித் தாயை போற்றி அபிராமி பட்டர் பாடினார். அவரின் பக்திக்காக அன்னையே இறங்கி நேரில் காட்சி கொடுத்தாள் என்று பேசப்படுகின்றது. வாழ்வில் அனைத்து வளமும் பெற தாய் அபிராமி அருள் தேவையாகும்.
கணபதி காப்பு
காப்பு தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.
1. ஞானமும் நல்வித்தையும் பெற
நூல் 1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.
உரை:
உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.
2. பிரிந்தவர் ஒன்று சேர
2 துணையும், தொழும்தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
உரை:
அபிராமி அன்னையை நான் அறிந்தேன் . அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
கணவனை மனைவி ஒற்றுமையை போற்றும் இந்த பாடல் சிறந்த ஒன்றாகும்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
3.அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே,. திருவே! வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே!
உரை:
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.