ஆன்மிகம்ஆலோசனை

அபிராமி அந்தாதிப் பாடல்கள் 19-21 உரைவிளக்கதுடன்

அபிராமி அந்தாதி தாயின் அருள் பெற்றுத்தரும். அபிராமி தாயின் அருள் பெற்று வாழ்வில் வளம் பெற தேவைகளை நிறைவேற்றி ஆன்ம சக்தி அதிகரிக்கச் செய்யும் தாய் அபிராமியை மனமாறபூஜித்து இந்த பாடல்களைப் பின்பற்றி பாடவும். கவிஞர் கண்ணதாசன் உரை விளக்கமும் கொடுத்துள்ளோம்.

19. பேரின்ப நிலையடைய

வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

விளக்கவுரை

ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.

மேலும் படிக்க : சனி பிரதோஷத்தன்று ஸர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம்-திரியம்பகேஸ்வரம்

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

விளக்கவுரை

என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.

விளக்கவுரை

அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!

மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *