Aadi Shasti : ஆடி வளர்பிறை சஷ்டி விரத முறை 10.08.2024
தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த மாதம் என்பது ஆடி மாதம் தான். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். மங்களம் நிறைந்த ஆடி மாதத்தில் அம்மனின் சொரூபனும், புதல்வனுமான முருகப்பெருமானை வழிபடுவது மிகுந்த சிறப்பை தேடித்தரும். அதிலும் 10.08.2024 சனிக்கிழமையான இன்று ஆடி சஷ்டி ஆகும்.
வளர்பிறை சஷ்டி
பொதுவாக முருகப்பெருமானின் வருவதற்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக கருதப்படும் அதேபோல் நட்சத்திரத்தில் கிருத்திகை நட்சத்திரமும் திதியில் சஷ்டி திதியும் முக்கிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் முருகப்பெருமானிடம் விரதம் இருந்து வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி சஷ்டி விரதம்
ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை விரதம் இருந்து வழிபடுவது கோடிக்கணக்கான பலன்களை நமக்கு தேடித் தரும். எனவே இந்த நாளை யாரும் தவறவிடாமல் முருகப்பெருமானின் முழு அருளையும் பெறுங்கள்.
விரதம் இருக்க நினைப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு உங்களது பூஜை அறையை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு , செவ்வரளி மாலை இட்டு வழிபட வேண்டும்.
அடுத்ததாக முருகப்பெருமானின் பிடித்த நெய் வைத்தியமான அவல் சர்க்கரை , அவல் பாயசம், பொங்கல் , அல்லது பழங்கள் ஆகியவற்றை படைத்து வழிபடலாம். ஆனால் உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வைத்து வழிபடுவது சிறந்தது.
முருகப்பெருமானுக்கு பூஜை செய்து கந்தனின் மந்திரங்கள் உச்சரித்து நீங்கள் எந்த காரியத்திற்காக விரதம் இருக்கிறீர்களோ அதனை சொல்லி முறையிட்டு உங்கள் விரதத்தை தொடங்குங்கள்.
விரதம் இருக்கும் நபர்கள் அன்றைய தினம் முழுவதும் கந்த சஷ்டி கவசம் ,திருப்புகழ் , கந்த குரு கவசம் ஆகியவற்றை படிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் ஓம் முருகா போற்றி என்ற தாரக மந்திரத்தை அடிக்கடி உச்சரித்தாலே முருகனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
மாலையில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு உங்கள் விரதத்தை முடிக்கலாம் அல்லது வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு நெய்வேத்தியம் வைத்து பூஜை செய்து உங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
ஆடி சஷ்டி விரதம் இருப்பவர்கள் முடிந்தால் இன்றைய தினம் கந்தனின் அறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது மிகவும் நன்மை தரும்.