ஆன்மிகம்ஆலோசனை

இத்தனை சிறப்புகளையும் தன்னகத்தே வைத்துள்ள ஆடி மாதம் பற்றி தெரிந்து கொள்வோமா

ஆடி மாதம் தொடங்கியதிலிருந்து ஆடி பண்டிகை தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாகபஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவ ஜெயந்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை ஆக இத்தனை வைபவங்கள் இந்த மாதத்தில் வருகின்றன.

வருடத்தின் மாதங்கள் அயனங்களாகப் பிரிக்கப்படுகின்றன. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயணம் புண்ணிய காலம் என்றும் தை முதல் ஆனி வரை உத்ராயணம் என்று இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சூரிய பகவான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கத் தொடங்கும் இந்த காலத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு பொழுது அதிகமாகவும் காணப்படும்.

சிவனை விட சக்தி அதிகமாக பரிமளிக்கிறது. ஆடி மாதம் சக்தி மாதமாக வழிபடுவதற்கு ஈஸ்வரன் ஈஸ்வரிக்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் தான் ஆடிமாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சைபழம், கூழ் அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடுகின்றனர்.

ஆடி சிறப்பு

ஆடி மாதம் அத்தனை ஒரு சிறப்பு வாய்ந்த கீர்த்தி மாதம் என்று சொல்லலாம். இந்த மாதத்தில் திருமணங்கள் செய்யப்படு வதில்லை. விஞ்ஞான ரீதியாக இந்த நாட்களில் உஷ்ணம் கூடியிருக்கும்.

அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழ் சாப்பிடும் பொழுது உஷ்ணத்தை குறைத்து உடலை சீரான வெப்பநிலையில் வைக்கும். எலுமிச்சம் பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் சக்தி இருப்பதால், வேப்பிலையை பற்றி கூற வேண்டியதில்லை. தீய சக்திகளையும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி மருத்துவ குணம் கொண்ட வேப்பிலை இலைகளுக்கு உண்டு.

பெண்கள் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதமிருந்து வேப்பிலை ஆடை தரித்து, அலகு குத்தியும், பூ மிதிக்கும் விழா எடுத்து தங்களின் கோரிக்கையை அம்மனிடம் விண்ணப்பித்து கொள்கின்றனர். ஆதிகாலம் முதல் இதை கடைபிடித்து வருகின்றனர்.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அலகுகளின் வலியோ, பூ மிதிக்கும் பொழுது நெருப்பின் உஷ்ணம் தெரியாமல் அன்னை ஆதிபராசக்தி பக்தர்களை காத்தருள்கின்றாள்.

தள்ளுபடி

ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. ஆடியில் விதை விதைத்தால் மழை நாட்களில் பயிர் தைமாத அறுவடையில் நல்ல மகசூல் கொடுக்கும். விவசாயிகள் நிலத்தை உழுது விதை போட்டதில் கையிருப்பு தொகையை செலவழித்து இருப்பான். நிறைய தொகை கொடுத்து எந்த சாமானும் வாங்க முடியாது. ஆகையால் அவர்களுக்கு தள்ளுபடி விலையில் கொடுக்க ஆரம்பித்தார்கள். அது இன்றுவரை தொடர்கின்றன.

ஆடிமாதத்தில் ஞாயிறு பகவானின் சூட்சும சக்தி கதிர் பூமியில் விழுவதால் தான் ஜபங்கள், மந்திரங்கள், பூஜைகள் என்று எது செய்தாலும் பன்மடங்காக பயனை தரும், என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பக்தகோடிகள் அனைவரும் இந்த புனிதமான காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தெய்வ அனுகூலத்தை பெற்றுக்கொள்வார்கள்.

எனவே இந்த ஆடி மாத ஆகிய தினங்களில் தெய்வ சிந்தனைகளில் மனதை செலுத்தி, மன சுத்தியுடன் பூஜை முறைகளை செய்து தெய்வ கடாட்சத்தை பெற்று வளமுடன் வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *