ஆடிப்பூரத்தன்று அம்மனை வழிபட கேட்கும் வரம் கிடைக்கும்
ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் நாளில் ஆடிப்பூரம், அம்மன் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக நடைபெறும். ஜூலை 24, 2020 வெள்ளிக்கிழமை அன்று ஆடிப்பூரம் வருகின்றது.
இந்த நாளில் ஏழை சுமங்கலி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து கொடுப்பது நல்லது. மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.
ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில், அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வம் செழிப்பு உண்டாகும். தாய்மை பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு.
பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல நம்மை படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் ஆடிப்பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகின்றன.
அம்பிகைக்கு பல வகை உணவுகளும், ஆடி கூழும் படைத்து மக்கள் வழிபட்டு வேண்டிக் கொள்வார்கள். அம்பாளுக்கு மலர், பழம், காய்கறி, நகை, மஞ்சள், சந்தனம், குங்குமம் இது போன்ற பல அலங்காரங்கள் நடைபெறுவது போல, ஆடிப்பூரத்தன்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விசேஷமாக வளையல்களால் அலங்காரம் வைபவம் நடைபெறும்.
பத்ரகாளி அம்மன், அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்வது போல கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளைகாப்பு நடத்தி ஐந்து வகை உணவுகளும், முறுக்கு, அதிரசம் ஆகியவையும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்து கொள்வதால் சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம். இந்த நாளில் பெண்கள் கூட்டம் அலை மோதும்.
அம்மனுக்கு உகந்த திருநாட்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூர திருநாள் மிகவும் சிறப்பானது. ஆடிப்பூர திருநாளில் சித்தர்களும், யோகிகளும் தங்களது தவத்தை துவங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் கோவிலுக்கு செல்ல முடியாததால் வீட்டில் உள்ள அம்மன் படங்களுக்கு முன் வளையல்கள் மாலை கோர்த்து அணிவித்து வழிபடலாம்.