ஆன்மிகம்ஆலோசனை

உங்கள் பிரச்சினைகள் ஆடி அடங்க உகந்த மாதம் இந்த ஆடி மாதம்

ஆடி 1 வியாழக்கிழமை(16.7.20) ஆடி மாதம் பொதுவாக அம்மனுக்கு உரிய மாதமாக வழிபடுகிறோம். ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயனம் ஆரம்பமாகும். இந்த காலங்களில் புனித நதியில் நீராடுவது விசேஷம்.

ஆடி மாதத்தில்தான் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடத்தப்படுகிறது.

ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன் கிடைக்கும். எலுமிச்சைப்பழ விளக்குகளை ஒருபோதும் வீட்டில் ஏற்றி வழிபடக் கூடாது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளால் கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகம். ஒரு சில அம்மன் கோவில்களில் வளையல் அலங்காரம், காய்கறி அலங்காரம். வளைகாப்பு நடத்துதல் என்று கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

மேலும் கூழ் காய்ச்சி ஊற்றுதல் அன்னதானம் என்று மிகவும் ஆரவாரமாக இருக்கும். ஆடி பவுர்ணமி தினத்தன்று ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.

ஆடி மாதம் முழுவதும் மீனாட்சி அம்மனை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். முத்துமாரி அம்மனை மனம் உருக வழிபட்டு வருவதால் திருஷ்டிகள் விலகி போகும். ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டு வர வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வருவதால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாஹனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பைத் தரும்.

ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் அவசியம் மேலும் அம்மனுக்கு இந்த மாதத்தில் பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம். சிறப்பு பூஜைகள் செய்யும் போது குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவு கொடுத்து,ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி வளையல், தாம்பூலம் கொடுத்து வழிபடுவது இந்த மாதமே.

ஆடிப்பூரம் ஆண்டாள் பிறந்தநாள் என்பதால் திருப்பாவை, நாச்சியார், திருமொழி, திருப்பல்லாண்டு, பாசுரங்கள் பாடுவதும் ஆண்டாளை வழிபடுவதால் ஆண்டாள் மனம் குளிர்ந்து எல்லா பிரச்சனைகளையும் நிறைவேறும்.

செவ்வாய், வெள்ளி கிழமை அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக இந்த ஆடி மாதம் விளங்குகிறது. உங்கள் பிரச்சினைகள் ஆடி அடங்க உகந்த மாதம் இந்த ஆடி மாதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *