நம் முன்னோர்களின் ஆசீர்வாதங்களை அள்ளித் தரும் ஆடி அமாவாசை – 2
பித்ரு தோஷம் நீங்க ஒரு முறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக அம்மாவாசை, இறந்த திதி மற்றும் பித்ரு தினமான மக நட்சத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம் சிராத்தம் செய்து வரவேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
புனிதமான ஆடி அமாவாசை என்று முன்னோரையும், மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுக்க வேண்டும். புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி, இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது, நாம் செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

நாம் செய்யக்கூடிய தான இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாக செய்தால் நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சிராத்தத்தை முக்கியத்துவம் பற்றி கூர்ம புராணம், பிரம்ம புராணம், கருட புராணம், ஆதித்திய புராணம் போன்ற நூல்களில் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கின்றன.
யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா.
தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப்பாட்டி
அம்மாவின் கோத்திரம், அவர்களின் பரம்பரை.
அப்பாவின் கோத்திரம், அவர்களின் பரம்பரை.
என்று 12 பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
மேலும் யாருமில்லாத ஆதரவற்ற இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.
சந்திரன் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணங்கள் நம் பெற்றோர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும் என்பதற்காகவே அமாவாசை தினம் விரதத்திற்கு உரிய நாளாக சொல்லப்பட்டிருக்கிறது.

எல்லா நாட்களும் இறைவனையும், நம் முன்னோர்களையும் வழிபட உகந்த நாட்கள். ஆனபோதும் சில நாட்களில் நிச்சயம் இந்த வழிபாடுகளை முறைப்படி மேற்கொள்ள வேண்டுமென்று வகுத்துள்ளனர் பெரியோர்கள்.
முன்னோர்கள் ஆடி அமாவாசை அன்றே தங்கள் சந்ததியினரை பார்க்க பூமிக்கு வர தொடங்குகிறார்கள். புரட்டாசி அன்று பூமிக்கு வந்து சேர்வார்கள். தை அமாவாசை அன்று மீண்டும் பித்ரு லோகத்துக்கு திரும்புவார்கள் என்பது ஐதீகம்.
இந்த மூன்று அமாவாசைக்கு நிச்சயம் அனுசரிக்க வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறலாம் என்கின்றனர்.