காலபைரவர் குறித்த பல அரிய தகவல்கள்..
சிவன் ஸ்தலங்களில் கால பைரவர் சன்னதி கண்டிப்பாக இருக்கும். இவருக்கென தனி சன்னதிகளும் உண்டு. நம்மை காத்து நிற்கும் கடவுளாக நமக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பவராக விளங்குபவர் காலபைரவர். இவரைப் பற்றிய சில சுவாரசியமான நாம் முக்கியமாக அறிய வேண்டிய பல தகவல்களை பார்ப்போம்.

காலபைரவர் குறித்த முத்தான சில தகவல்கள்
- தினந்தோறும் காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும் மதியம் வழிபட்டால் நாம் நினைத்தவை நடக்கும் விரும்பியவை நிறைவேறும் மாலையில் வழிபட்டால் பாவம் தீரும் இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும்.
- காலபைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு ஆகும். இதில் புனுகு ,அரகஜா ,ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ ,பச்சை கற்பூரத்தை சேர்ப்பர்.
- தாமரை வில்வம் தும்பை சந்தன மாலைகளை பைரவருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பாகும் செவ்வரளி மஞ்சள் செவ்வந்தி வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது விசேஷமாகும் மல்லிகை பூவை எக்காரணம் கொண்டும் பைரவருக்கு அணிய கூடாது.
- செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் என்பர் இவரது இடது கையில் கோபாலத்துக்கு பதில் அட்சய பாத்திரம் இருக்கும்.
- காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடிய பின் விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக காலபைரவரை தரிசித்தால் தான் யாத்திரைக்கான முழுப் பலன் கிடைக்கும்.

- தேய்பிறை அஷ்டமி அன்று பைரவ விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த நாள் செவ்வாய்க்கிழமையாக இருந்தால் மிகவும் நல்லது. தொடர்ந்து 21 தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்தால் நாம் வேண்டியவை நிறைவேறும் .நினைத்தது நடக்கும்.
- சர்க்கரைப் பொங்கல் தயிர் சாதம் தேன் செவ்வாழை அவல் பாயாசம் உளுந்து வடை சம்பா அரிசி சாதம் பால் பல வகைகள் வைத்து வழிபடுவது மிகுந்த சிறப்பாகும். இவை அனைத்தும் கால பைரவருக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.
- “அமர்தகர்” என்றும் “பாப பக்ஷணர்” என்றும் பைரவர் அழைக்கப்படுகிறார். அமர்தகர் என்பதற்கு அகங்காரத்தை அளிப்பவர் என்றும் பாப பக்ஷணர் என்றால் அறியாமையால் செய்த பாவங்களை போக்குபவர் என்றும் பொருளாகும்.
- கால பைரவருக்கு சிவப்பு துணியில் ஒன்பது மிளகை ஒரு முடிச்சுட்டு நல்லெண்ணெய் விட்டு தீபமேற்றி வர வீட்டில் செல்வம் பெருகும். பணப் பிரச்சனை தீரும். மகிழ்ச்சி உண்டாகும்.

நமக்காகும் காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் குறித்து நாம் அறியாத பல தகவல்களை பார்த்தோம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த பைரவரை அனுதினமும் வழிபட்டு அவரின் அருள் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் அவரை எந்த நொடியில் நினைத்தாலும் நமக்கு பாதுகாவலனாக நம்மை என்றும் காப்பார்.