திருப்புகழ் 60 தகரநறை (திருச்செந்தூர்)
அப்பன் முருகன் பற்றி புகழ்ந்து பாடும் பாடல் இது இப்பாடலை தினமும் படித்தால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

பாடல் வரிகள்:
தகரநறை பூண்ட விந்தைக்
குழலியர்கள் தேய்ந்த இன்பத்
தளருமிடை யேந்து தங்கத் …… தனமானார்
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
சமயஜெப நீங்கி யிந்தப் …… படிநாளும்
புகலரிய தாந்த்ரி சங்கத்
தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித் …… துழல்மூடர்
புநிதமிலி மாந்தர் தங்கட்
புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்
புளகமலர் பூண்டு வந்தித் …… திடுவேனோ
தகுடதகு தாந்த தந்தத்
திகுடதிகு தீந்த மிந்தித்
தகுகணக தாங்க ணங்கத் …… தனதான
தனனதன தாந்த னந்தத்
தெனநடன மார்ந்த துங்கத்
தனிமயிலை யூர்ந்த சந்தத் …… திருமார்பா
திசையசுரர் மாண்ட ழுந்தத்
திறலயிலை வாங்கு செங்கைச்
சிமையவரை யீன்ற மங்கைக் …… கொருபாலா
திகழ்வயிர மேந்து கொங்கைக்
குறவனிதை காந்த சந்த்ரச்
சிகரமுகி லோங்கு செந்திற் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
தகர நறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத்
தளரும் இடை ஏந்து தங்கத் தன மானார் தமை … மயிர்ச்
சாந்தின் நறு மணம் கொண்ட அழகிய கூந்தலை உடையவர்கள்,
மெலிந்ததும் இன்பம் தருவதும் தளர்ந்துள்ளதுமான இடுப்பு தாங்கும்
தங்கநிற மார்பினை உடைய விலைமாதர்களை,
மனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும் … உள்ளத்தில் காம ஆசை
மேலெழ, கலவி இன்பத்தில் கூடி, மந்திரம், மதம், துதி இவைகளை
விட்டு இவ்வாறு ஒவ்வொரு நாளும்,
புகல் அரியதாம் த்ரி சங்கத் தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்
புவி அதனில் வாழ்ந்து … சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ்
நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில்
வாழ்ந்தும்,
வஞ்சித்து உழல் மூடர் புநிதம் இலி மாந்தர் தங்கள் புகழ்
பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு
வந்தித்திடுவேனோ … பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும்,
பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்)
புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி
மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ?
தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக
தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென
நடனம் ஆர்ந்த துங்கத் தனி மயிலை ஊர்ந்த சந்தத்
திருமார்பா … தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித்
தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத்
தென்ற தாளத்துக்கு ஏற்ப நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பில்லாத
மயிலை வாகனமாகக் கொண்ட, சந்தனம் அணிந்த அழகிய மார்பனே,
திசை அசுரர் மாண்டு அழுந்தத் திறல் அயிலை வாங்கு
செம் கை … திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்கும்படி,
செவ்விய திருக்கையில் ஏந்திய வெற்றி வேலைச் செலுத்தியவனே,
சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா … பல உச்சிகளைக்
கொண்ட (இமய) மலை (அரசன்) பெற்ற மகளாகிய பார்வதியின்
ஒப்பற்ற குழந்தையே,
திகழ் வயிரம் ஏந்து கொங்கைக் குற வனிதை காந்த …
விளங்குகின்ற வைர மாலையை அணிந்த மார்பினைக் கொண்ட
குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே,
சந்த்ரச் சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே. … சந்திரன்
தவழும் கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்குகின்ற திருச்செந்தூர்ப்
பெருமாளே.