உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்துவதில்லை..!! அண்ணாமலையை நோஸ் கட் செய்த தேர்தல் ஆணையம்..!!
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என்றும் தேர்தல் குறித்த புகார்களை நீங்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக திமுக அரசு கூறி வந்தாலும், பல இடங்களில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, “வாக்குப்பதிவு நாளில் தமிழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை இந்தக் காணொளி காட்டுகிறது. தேர்தல் ஆணையம் நாளை வாக்கு எண்ணிக்கை தினத்திலாவது தனது கண்களை மூடிக்கொண்டிருக்காமல் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தனது ட்விட்டரில் வீடியோ காணொளியுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதில், மாநில தேர்தல் ஆணையத்திற்கு பதிலாக மத்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்துவிட்டார்.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் குறித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம், “ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துவதில்லை. நீங்கள் அணுகவேண்டியது எங்களை அல்ல. அது தொடர்பான புகார்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தை அணுகவும்.” என அறிவுறுத்தியிருக்கிறது.