எஸ்பிபியின் இறப்பு! பிளந்து கட்டிய மழை! ரஜினியின் இரங்கல்!
உத்தமரின் சாவிற்கு மழை பெய்யாமல் இருக்குமா! இன்று மதியம் ஒரு மணி அளவில் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் இயற்கை எய்தினார். அதனைத் தொடர்ந்து சுமார் மூன்றரை மணி அளவில் சென்னையில் கருமேகம் சூழ இடியுடன் கூடிய பலத்த மழை. வருண தேவன் எஸ்பிபியின் ஆன்மா சாந்தியடைய செய்கிறார்.

70,80,90,20ஸ் என அனைத்து வயதினருக்கும் எல்லா வகையான பாடல்களையும் தந்த ஜாம்பவான். 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தந்த எஸ்பிபி இன்று நம்மோடு இல்லை என்பது பலரால் ஒத்துக்கொள்ள முடியாத நிஜம்.
திரையுலகம் மட்டுமல்லாமல் உலகமே இவரின் இறப்பை பெரும் இழப்பாக கருதுகிறது. அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த நிலா எஸ்பிபி. மூச்சுவிடாமல் பாட முடியும் என்று காண்பித்தவரின் பாடல்களை மூச்சுவிட மறந்து ரசிக்கலாம்.

திரை உலகத்தில் சிரிப்பையும் சங்கதி ஆக்கியவர் எஸ்பிபி. சந்தோசம் சிரிப்பு அழுகை கோபம் காதல் என அனைத்து உணர்வுகளையும் பாடலின் வாயிலாக மக்களிடையே உணர்ச்சி எழ வைக்கும் பாடகர். இவரின் சகாப்தம் மண்ணில் முடிந்தாலும் அனைவரின் மனதிலும் முடியாதது.
திரை உலகின் முன்னணி நடிகர்கள் முதல் இன்று வந்த புதிய நடிகர்கள் வரை அனைவருக்கும் பெரிய இழப்பாக கருதப்படுகிறது இவரின் இறப்பு. ஒவ்வொருவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவரவர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கமலஹாசன் ரஜினிகாந்த் என பல நடிகர்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்ட் எஸ்பிபி. ரஜினிகாந்த் இதனைக் குறிப்பிடும் வகையில் தனது இரங்கலை காணொளியாக தெரிவித்துள்ளார்.
ஆன்மீகம்
சீர்காழியின் பாடலுக்குப் பின் மக்களிடையே பெரும்பாலான தெய்வீக பாடல்களை தந்தவர் எஸ்பிபி.
விநாயகர் பாடல் முதல் முருகப் பெருமான் சிவபெருமான் பார்வதி வெங்கடாஜலபதி ஆஞ்சநேயர் ஷீரடி சாய்பாபா என அனைவரின் பாடல்களையும் பக்தி பரவசம் பொங்க பாடியவர் எஸ்பிபி.
பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம், ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி என்று சிவனின் பாடல்கள் நம்ம ஊரில் உள்ள கோவில்களில் திருவிழாவின்போது ஒலிப்பெருக்கியால் பிரத்யேகமாக ஒளிபரப்ப கூடிய பாடல். இவை இல்லாமல் திருவிழாக்கள் இல்லை.
புரட்டாசி மாதத்தில் வெங்கடாஜலபதியின் சிறப்பு பாடல்களான ஸ்ரீ சீனிவாசா கோவிந்தா கேட்காமல் அந்த மாதம் முடிவடையுமா!
நம் வாழ்வின் அங்கமான இசையை சிறப்பாக கொடுத்த எஸ்பிபி தனது 74வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.