வேலைக்காரன் வில்லனுக்கு இன்று பிறந்தநாள்
ஃபஹத் ஃபாசில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மலையாளத் திரையுலகின் முத்து முத்தான நடிகர் பட்டியலில் ஒரு மூத்தான நடிகர் ஃபாகாத் ஃபாசில். 8 ஆகஸ்ட் 1982 கோழிக்கோட்டில் பிறந்துள்ளார் அப்துல் ஹமீத் முகமது பஹத் பாசில் (எ) ஃபஹத் ஃபாசில். இவருடைய தந்தை ஃபாசில் திரைப்பட இயக்குனர். ஆகையால் திரைப்பட பின்னணி கொண்டவர் ஃபஹத் ஃபாசில்.
தன்னுடைய 19வது வயதில் தன் தந்தை இயக்கிய படத்தில் நடிப்பு பயணத்தை தொடங்கியவருக்கு முதல் படம் தோல்வியில் முடிந்தது. அதற்கு ஃபஹத் ஃபாசில் “எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் நடிப்புத் தொழிலில் வந்து இறங்கியது என் குற்றமே என் தந்தையின் மேல் எந்த குற்றமும் இல்லை” என இந்தப் படத்தின் தோல்விக்கு காரணமாக கூறியிருந்தார்.
அதனை அடுத்து ஐந்து வருட காலம் படிப்பை மேற்கொண்டு 2009ல் திரை உலகிற்கு படு தூளாக திரும்பி தொடர்ச்சியாக மலையாள படம் நடிக்கலானார். மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் நையாண்டி நாயகி நஸ்ரியா நாஜிம் நடித்த பெங்களூர் டேஸ் அனைத்து திரையுலக ரசிகர்களும் தேடித்தேடி பார்த்து ரசித்த படமாக அமைந்தது. இளைஞர்கள் அனைவருக்கும் பிடித்தமான ரேஸிங் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருப்பார் ஃபஹத் ஃபாசில். 2014இல் இவர்களுக்கு திருமணமும் நடக்க இந்தப் படமும் வெளியானது. ஆனால் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்தப் படம் வேறு கதாநாயகர்களுடன் எடுக்கப்பட பெரிய வெற்றியை தழுவவில்லை.

அருமையான திரைப்படம் பட்டியலை கொண்ட இவருக்கு தமிழ் திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லனாக 2017ல் தமிழ் திரையுலகில் நடிகலானார் ஃபஹத் ஃபாசில். ஆதி கதாபாத்திரம் மென்மையாக சித்தரிக்கப்பட வில்லனாக மாறுவது அட்டகாசமான நடிப்பு.
அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா ருத் பிரபுடன் திரையைப் பகிர்ந்தார். விஜய் சேதுபதியின் புதுவடிவம் பல எதிர்பார்ப்புகளை இந்த படத்திற்கு ஏற்படுத்தியது. ஃபஹத் ஃபாசில் நடிக்க வாய்ப்புகள் தேடும் இளைஞர் கதாபாத்திரத்தை யதார்த்தமாக நடித்து இருந்தார்.

2020 இந்தியாவில் கொரோனாவின் பரவலுக்கு முன் இவரின் மலையாளப் படமான ட்ரான்ஸ் வெளியானது. இந்தப்படத்திற்கு குவிந்த விமர்சனங்களும் பாராட்டுக்களும் குறிப்பிடத்தக்கவை. நிஜ வாழ்க்கையில் முஸ்லிமாக இருப்பவர் இந்த திரைப்படத்தில் இந்துவாகப் பிறந்து கிறிஸ்துவராக மாற்றப்பட்டு கிறிஸ்துவ ஃபாதராக பல அதிசயங்களை நிகழ்த்தும் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருப்பார். உலகில் ஆங்காங்கே நிலவி வரும் விஷயத்தை திரைக்குக் கொண்டு வந்துள்ள இயக்குனரையும் கதாநாயகராக நடித்த இவரை பல பாராட்டு மாலைகள் வந்தடைந்தன.
திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகுவும் வலம் வரும் ஃபஹத் ஃபாசிலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.