நன்மை அளிக்கும் சாரதா நவராத்திரி
ஒவ்வொரு வருடமும் மொத்தமாக நான்கு நவராத்திரிகள் வருகின்றன. பங்குனியில் லலிதா நவராத்திரி, மாசியில் ராஜமாதங்கி நவராத்திரி, ஆடியில் மகா வராஹி நவராத்திரி, புரட்டாசியில் பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி. இதில், இறுதியாய் கூறிய சாரதா நவராத்திரியே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள்.
- முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.
- அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.
- இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.
முதல் நாளில் : மகேஸ்வரி
முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி கொடுக்கிறாள். இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து தோடி ராகப்பாடல்களை பாடலாம்.
இரண்டாம் நாளன்று : கௌமாரி
இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபத்தில் இருப்பவளுக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். இன்றைய தினம் கல்யாணி ராகமே அவளுக்கு சிறந்தது.
மூன்றாம் நாள் : வராகி
மூன்றாம் நாள் வராகி ஆகிறாள் அன்னை. செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து காம்போதி ராகம் பாட வேண்டும்.
மேலும் படிக்க : துன்பம் போக்கும் வராஹி மந்திரம்
நான்காம் நாள் : மகாலட்சுமி
நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கிறாள் தேவி. மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும். இவளுக்கு உகந்தது பைரவி ராகம்.
ஐந்தாம் நாளில் : வைஷ்ணவி
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அம்பிகை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை. பந்து வராளி ராகப்பாடல்கள் பாட வேண்டும்.
ஆறாம் நாள் : இந்திராணி
ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது நீலாம்பரி ராகமும், தேங்காய் சாதமுமே.
ஏழாம் நாளில் :சரஸ்வதி
ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து, பிலஹரி ராகம் பாடலாம்.
எட்டாம் நாளில் : நரசிம்ஹி
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை. இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, புன்னக வராளி இசைக்கலாம். சர்க்கரை பொங்கல் தேவிக்கு உகந்தது.
மேலும் படிக்க : ஆன்மீக சிறப்புமிக்க செவ்வாய்க்கிழமை
ஒன்பதாம் நாள் சாமுண்டி
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வசந்தா ராகம் இசைக்கலாம்.
இத்துடன் நித்தம் ஒரு சுண்டலால் நிவேதனம் பண்ணுவது நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி நமக்கு நன்மை அளிக்க வைக்கும்.