ஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை 5 ஆம் நாள் பாடல்

சிவபெருமானின் அளவிட முடியாத உயரத்தை அனைத்து வெல்லும் குணத்தையும் கொண்ட ஆதி அந்தம் இல்லாத அப்பனைக் காண எழ வேண்டிப் பாடப்படும் பாடல் காண்போமா..

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல… இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

விளக்கம்: கடவுளா…அவரை எனக்குத் தெரியாதா… அவரைத் தான் தினமும் பார்க்கிறேனே! தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன! புதிதாக அவரிடம் என்ன காணப்போகிறோம்! வருஷம் தோறும் வருகிற மார்கழி தானே! கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன! என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் தான் தோழியின் நிலை இருக்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், இறைவனின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்கள் சக தோழியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *