செய்திகள்

வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பலி:-கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் அருகே பரிதாபம்

கடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் வியாழக்கிழமை இறந்தனர்.


கடலூர் அருகிலுள்ள ராமாபுரம் வண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் வீரசேகர் (17), எஸ்.புதூரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் மகன் சுதீஷ்குமார் (17), அதேப்பகுதியைச் சேர்ந்த தணிக்காசலம் மகன் புவனேஷ்குமார் (17). இவர்கள் மூன்று பேரும் வெள்ளக்கரையில் உள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். தற்போது பள்ளி செயல்படாத நிலையில் நண்பர்களான 3 பேரும் வண்டிக்குப்பம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு, சமத்துவபுரத்தின் பின்பகுதியில் 2013 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட யாரும் குடியேறாத நிலையில் உள்ள 130 வீடுகள் கொண்ட பகுதிக்குச் சென்றனர். வீடுகள் தரமாக இல்லாத காரணத்தால் அந்த வீடுகளில் யாரும் குடியேற வரவில்லை. தொடர்ந்து, பயன்பாட்டில் இல்லாததால் அந்த கட்டடம் ஆங்காங்கே விரிசல் விடப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகிறது.


மாணவர்கள் 3 பேரும் ஒரு வீட்டின் உள்ளே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது, திடீரென அந்த வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்துள்ளது. இதனால், அவர்கள் 3 பேரும் வெளியில் வருவதற்கு எத்தனிப்பதற்குள் மேற்கூரையும் இடிந்து அவர்கள் மீது விழுந்து அமுக்கியுள்ளது. வீடு இடிந்து விழுந்த சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், அவர்களால் முடியாததால் கடலூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், வீரசேகர், சுதீஷ்குமார் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, புவனேஷ்குமாரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிபுலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *