Jallikattu bulls

நான்காம் நாள் பாடல் 4) ஆழி மழைக்கண்ணா! ராகம்: வராளி

கண்ணபிரானை அழைத்துப் பாடப்படும் பாடல் வராளி ராகத்தில் அமைந்துள்ளது. ஆண்டாள் கண்ணனின் ரச்சிக்கும் குணத்தைப் போற்றிப் பாடுவாள்

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

ஆழி மழைக்கண்ணா! என்று பர்ஜன்ய தேவனை அழைக்கிறாள் ஆண்டாள். பர்ஜன்யனான வருணன் மட்டுமே உலகம் உய்ய நீரைத்தருகிறான். நீரின்றி அமையாது உலகு அல்லவா? இந்த பர்ஜன்ய தேவன் நாரணனைப்போலே, படைத்தல் – அழித்தல் தொழில்களை விட்டு ரக்ஷிக்கும் தொழிலை கைக்கொண்டிருக்கிறான் என்று ஒற்றுமை சொல்லி நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள். ஆழ்கடலினுள்ளேயே புகுந்து உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணிரை எடுத்துக்கொண்டு ஊழி முதல்வனான எங்களின் நாராயணின் உடல் போல மெய் கருத்து, பாற்கடலில் துயிலும் பத்மநாபனின் திருத்தோள்களில் உள்ள சுதர்சனாழ்வான் மின்னுவது போலே மின்னலை ஏற்படுத்திக்கொண்டு, அந்த பத்மநாபனின் சங்கொலிபோல் நின்று அதிர்ந்து இடி இடித்து, அவனது சார்ங்கம் எனும் வில் எப்படி சரமழையை பொழிந்ததோ அப்படி தயங்காமல் பொழிந்து நாங்கள் சுபிக்ஷத்துடன் வாழ பெய்திடாய் அதை எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *